தற்போது நாடெங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் டெங்கு கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாகி விடும். இந்தக் கொசுக்கள் சிலரை மட்டுமே அதிகமாக கடிக்கும்.
பொதுவாக, யாருக்கு அதிகமாக உடல் வியர்க்கிறதோ அவர்களையே கொசுக்கள் கடிக்கின்றன. வியர்க்கும்போது உடலில் ஒரு ரசாயனம் சுரக்கும். அது கொசுக்களை மிகவும் கவர்ந்து விடுவதால், அவர்களைத் தேடிப்போய் கொசுக்கள் கடிக்கின்றன. பொதுவாக, ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு அதிகமாக வியர்க்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கையாகவே உடல் எடை கூடுவதால் அவர்களின் உடல் வெப்பமும் அதிகமாகி, கூடுதலாக வியர்க்கும். எனவே, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் இந்தக் கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க: டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசுக்கள் பெரும்பாலும் பகலில்தான் அதிகமாகக் கடிக்கின்றன. மனிதர்களின் கை முட்டி மற்றும் கால் முட்டி, கணுக்கால் ஆகிய பகுதிகளில்தான் அதிகமாகக் கடிக்கும். டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், எலும்புகளில் வலி, அசௌகரியம், தசை வலி, உடல் அசதி, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்படலாம். எனவே, கொசு கடிக்காமல் நம்மை தற்காத்துக் கொள்தல் மிகவும் அவசியம்.
கொசு கடிக்காமல் இருக்க: கைக்குழந்தைகளுக்கு உடல் முழுவதும், கை கால்களை முழுக்க மூடி உடை அணிவிக்க வேண்டும். சற்றே விவரம் தெரிந்த குழந்தைகளுக்கு கை, கால்களில் கொசு கடிக்காமல் இருக்க க்ரீம் தடவிக் கொள்ளலாம். இல்லையெனில், முகத்துக்குப் போடும் பவுடரை கை கால்களில் மற்றும் உடல் வெளியே தெரியும் இடங்களில் போட்டு விட்டால் கொசு கடிக்காது.
வீட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஃப்ரிட்ஜின் பின்புறமுள்ள தண்ணீர் சேரும் பெட்டியில் கற்பூரம், தேங்காய் எண்ணெய் சில துளிகள் மற்றும் கல் உப்பு என்று போட்டு வைத்து விட்டால் கொசுக்களால் முட்டை வைக்க முடியாது. தொட்டி செடிகள் இருந்தால், அவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் டெங்கு கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும்.