நாய் கடித்தால் அதனால் ஏற்படும் இறப்பு வேதனைக்குரியது. வெறி நாய் பற்றிய விழிப்புணர்வு நம் அனைவரிடமும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, வெயில் காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பது, நாய்களுக்கு சரிவர உணவு கிடைக்காமல் போவது, போக்குவரத்தின் அதிக இரைச்சல் போன்ற காரணங்களால் தெரு நாய்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு ஆக்ரோஷமாகின்றன. இதனால் தெருவில் வருவோர் போவோரை எல்லாம் கடித்து விடுகின்றன.
நாய்களின் உமிழ்நீரில் அதிகமாக இருக்கும் வைரஸ்கள் அவை கடிக்கும்போதோ அல்லது ஆறாத காயத்தில் அதன் உமிழ்நீர் படுவதாலோ எளிதாக மனிதர்களின் இரத்தத்தில் அது கலந்து விடுகிறது.
வெறி நாய் கடித்தால், கடித்த நாயை நான்கு நாட்கள் கவனிக்க வேண்டும். அது உயிருடன் இருந்தால் கவலை இல்லை. இறந்துவிட்டால் ஆபத்து என்று கொள்ள வேண்டும். ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்ட 4 முதல் 10 நாட்களுக்குள் நாய் இறந்து விடும். அந்நிலையில் தெரு நாய் ஒருவரை கடித்தால் கட்டாயம் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ரேபிஸ் நோயில் இரண்டு வகை உள்ளது. Dumb and Furious. முதல் வகையில் பாதிக்கப்பட்ட நாய்கள் நான்கு நாட்களில் இறந்து விடும். இரண்டாவது வகையில் பாதிக்கப்பட்டவை இறக்க பத்து நாட்கள் ஆகும். இதில் இரண்டாவது வகை ரேபிஸில் நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாகி வருவோர் போவோரை எல்லாம் கடிக்கத் தொடங்கும்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் ரேபிஸ் ஆபத்து இல்லை. ஆனால், தெரு நாய்கள் கடித்தால் அந்த நாயை கண்காணிப்பதுடன், நாய் இறந்தால் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
நாய் கடித்த ஐந்து நாட்களுக்கு மேல் அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி இருக்கும். இதைத் தொடர்ந்து காய்ச்சல், வாந்தி வருவதுடன் உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ சிரமம் ஏற்படும். ரேபிஸ் நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். காரணம், தண்ணீரை கண்டதும் தொண்டையில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து சுவாசம் நிற்பது போல் உணர்வு ஏற்படும். எங்கே உயிர் போய் விடுமோ என்று பயந்து தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதற்கு, ‘ஹைட்ரோ போபியா’ என்று பெயர்.
நாய் கடித்த 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. முதலில் கடிப்பட்ட இடத்தை ஓடும் நீரில் (running water) தொடர்ந்து பத்து நிமிடங்கள் நன்கு அழுத்தி கழுவ வேண்டும். பஞ்சில் டெட்டாலை நனைத்து கொண்டு கடிப்பட்ட இடத்தை நன்கு துடைக்கவும். அதைத் தொடர்ந்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரேபிஸ் ஊசி போட வேண்டும். இந்த ஊசி அரசு மருத்துவமனையில் இலவசமாகப் போடப்படும்.
நாய் கடித்தால் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிக இனிப்பு வகைகள், காரமான உணவுகள், பால் சார்ந்த உணவுகள் (இது சளி பாதிப்பை ஏற்படுத்துவதோடு பாக்டீரியா உற்பத்தியும் அதிகரிக்க செய்யும்) மற்றும் ஆல்கஹால் ஆகியவை நோய் தொற்று அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.
ரேபிஸ் கிருமிகள் மூளையைத் தாக்குவதற்கு முன்னால் சிகிச்சையை ஆரம்பித்து விட்டால் ரேபிஸ் நோயாளிகள் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. தற்போது நாய் கடிக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன. அதனால் கவலை வேண்டாம்.