பூண்டு அநேக ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள் கொண்டுள்ள ஓர் அற்புதமான மூலிகை. ஆனால், உறைப்புடன் கூடிய அதன் கடுமையான வாசனையின் காரணமாக பலர் அதை உண்பதற்கு தயங்குவதுண்டு. பூண்டில் உள்ள அல்லிசின் என்ற கூட்டுப்பொருள் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி நோய் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கவும், உடலிலுள்ள நோயை விரைவில் குணமாக்கவும் முடியும். பூண்டினை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சாதாரண சளி மற்றும் ஃபுளு போன்ற நோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும், விரைவில் குணமாக்கவும் முடியும்.
பூண்டில் உள்ள ஆக்ட்டிவ் காம்பௌண்ட்கள் இரத்தக் குழாய்களை தளரச் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் இரத்த அழுத்தம் சமநிலைப்பட்டு இதய நோய் வரும் அபாயம் தடுக்கப் படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் முழுக்க உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க உதவும். இதனால் ஆர்த்ரைட்டீஸ் போன்ற நோய் உண்டாகும் அறிகுறிகள் மறையும். ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியம் மேன்மை பெறும். பூண்டு செரிமான செயல்பாடுகளில் உதவக்கூடிய என்சைம்களை ஊக்கப்படுத்தி நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சமநிலைப்படுத்தவும் உதவி புரியும். இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் குடலுக்குள் உள்ள தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, மொத்த செரிமானமும் சிறப்பாக நடைபெற உதவி புரியும்.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் தரும் பூண்டினை அதன் அதிகப்படியான வாசனையை காரணமாக்கி, ஒதுக்கி வைப்பது நியாயமில்லை என்றே தோன்றுகிறது. பூண்டின் விரும்பத் தகாத வாசனை குறைய சில வழி முறைகளை இனி பார்க்கலாம்.
1. பூண்டை உணவுகளில் சேர்த்து நன்கு சமைத்து உண்ணும்போது, நீண்ட நேரம் வாயில் நிற்கும் அதன் வாசனை குறைந்துவிடும். அப்படி சமைக்கும்போது, பூண்டின் வாசனைக்குக் காரணமாகும் அதிகளவு சல்ஃபர் சமநிலைப்படுத்தப்பட்டுவிடும்.
2. பூண்டை நெய்யில் வறுத்து அல்லது மற்ற காய்களுடன் சேர்த்து வதக்கி உண்பதாலும் அதன் வாசனை குறையும்.
3. பூண்டு சாப்பிட்ட பின், ஃபிரஷ் புதினா இலைகளை வாயில் போட்டு மெல்வதாலும் பூண்டு வாசனை நீங்கும். இயற்கையாகவே இந்த மூலிகைக்கு கெட்ட வாசனையை நீக்கும் குணம் உண்டு.
4. பச்சைப் பூண்டை சமையலில் உபயோகிப்பதற்குப் பதில் பூண்டு பவுடர் உபயோகித்தால் வாசனை குறைந்த அளவிலேயே இருக்கும். சாலட்களில் தூவி உட்கொண்டும் நன்மை பெறலாம்.
5. லெமன் ஜூஸ் அல்லது வினிகர் போன்ற ஆசிட் தன்மை கொண்ட உணவுகளோடு சேர்த்து பூண்டை உண்ணும்போது, அப்பொருட்களில் உள்ள ஆசிட் பூண்டிலுள்ள சல்ஃபருக்கு எதிராக வினை புரிந்து பூண்டு வாசனையை குறைத்துவிடும்.
6. பூண்டு சாப்பிட்ட பின் பற்களை பிரஷ் கொண்டு நன்கு துலக்குவதும், பல் நாடா (Floss) உபயோகித்து பற்களிடையே உள்ள துகள்களை நீக்குவதும், மவுத் வாஷ் கொண்டு பற்களையும் ஈறுகளையும் சுத்தப்படுத்துவதும் பூண்டு வாசனையை அறவே நீக்க உதவும்.