சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஈடுபடும் உடல் செயல்பாடுகளில் ஒன்றே நீச்சல் பயிற்சி ஆகும். உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் செயல்பாடே நீச்சல் பயிற்சி. நீச்சல் பயிற்சி உடல் வலிமை, சகிப்புத் தன்மை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீச்சல் அடிப்பது பல தசை குழுக்களை ஒரே நேரத்தில் உள்ளடக்கியதாகும். இது தசை வலிமையை அதிகரிப்பதுடன், சகிப்புத் தன்மையையும் ஊக்குவிக்கிறது. நீச்சல் பயிற்சி செய்யும் போது நீரின் எதிர்ப்பு தசைகளை எதிர்த்துப் போராட வைக்கிறது. இதன் மூலம் தசை வலிமை அதிகரிக்கிறது. மேலும் இது உடலுக்கு சீரான பயிற்சியை அளிப்பதுடன் முதுகு, கைகள், கால்கள் மற்றும் தோள்களை பலப்படுத்த உதவுகிறது.
நீச்சல் அடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் கட்டுப்படுத்தப்பட்ட சுவாச நுட்பங்களுடன் கூடிய ஏரோபிக் உடற்பயிற்சி இதயத்துடிப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதய தசைகளை பலப்படுத்துகிறது.
நீச்சல் பயிற்சி எடை மேலாண்மை மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. நீச்சல் பயிற்சி கலோரிகளை எரிப்பதுடன், தசைகளை வலுப்படுத்துகிறது. இதனுடன் சீரான உணவை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
நீச்சல் பயிற்சி செய்யும் போது, தண்ணீரில் இருப்பது இனிமையான உணர்வைத் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் நீச்சல் செய்யும் போது என்டோர்பின்கள் வெளியிடப்படுகின்றன. இந்த என்டோர்பின்கள் நல்ல ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன. இதன் மூலம் கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அளவைக் குறைகிறது.
நீச்சல் பயிற்சி செய்வதற்கு கட்டுப்படுத்தப்பட்ட சுவாச நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் சுவாச தசைகள் வலுப்படுத்தப்படுவதுடன், ஆக்ஸிஜனின் உட்கொள்ளலை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சிறந்த ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இந்த சுவாசப் பயிற்சிகள் ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடலில் நெகிழ்வுத் தன்மையை ஊக்குவிக்க நீச்சல் சிறந்த தேர்வாக அமைகிறது. நீச்சலில் தேவைப்படும் அசைவுகள் தசைகளை நீட்ட, இயக்க வரம்புகளை மேம்படுத்த மற்றும் உடல் விறைப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் நீச்சல் பயிற்சி செய்வது நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
தேசிய சுகாதார நிறுவனங்கள் நீச்சல் கலையை ஒரு முக்கியமான உடல் செயல்பாடாக கருதுகிறது. நீரிழிவு நோய்களுக்கும்,உயர் இரத்த அழுத்தத்திற்கும், உடல் பருமனை நிர்வகிப்பதற்கும் நடைமுறை மருந்தியல் அல்லாத அணுகுமுறையாக கருதுகிறது.
நீச்சல் மகிழ்வைத்தரும் உடற்பயிற்சியாகவும் அமைந்துள்ளது. இதை நாம் ஒரு முறை நீந்திப் பார்த்து அனுபவித்துத்தான் புரிந்துகொள்ள முடியும்!