Excessive exercise 
ஆரோக்கியம்

அதீத உடற்பயிற்சியும் ஆபத்தே!

பொ.பாலாஜிகணேஷ்

டற்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். நம்மில் பலர் அதீத உடற்பயிற்சியில் ஈடுபடுவர். நம் உடலால் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவுதானே செய்ய வேண்டும். மிகக் கடுமையான உடற்பயிற்சி செய்வதன மூலம் நமக்கு எந்தப் பலனும் இல்லை. மாறாக நமக்கு அதனால் எதிர்வினைகள்தான் கிடைக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே.

அதி தீவிரமான உடற்பயிற்சி நிகழ்வுகளின்போது மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்வதை யூகித்து விடலாம்.

உடற்பயிற்சிக்கான வரம்பை கடந்து கடுமையாக பயிற்சி செய்யும்போது காயம், மூட்டுவலி, உடல் வலி போன்றவை ஏற்பட வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் ஒவ்வொன்றும் நீங்கள் மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை குறிப்பிடும். உடற்பயிற்சி செய்யும்போது ஆரம்ப காலத்தில் ஓரிரு நாட்கள் இத்தகைய அறிகுறிகளை அனுபவிப்பது இயல்பானது. ஆனால் தொடர்ந்து தசை வலியை அனுபவித்தால் நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

உடற்பயிற்சி செய்யும்போதோ, அதற்கு பிறகோ எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? உடற்பயிற்சியின்போது போதிய கவனம் செலுத்த முடியவில்லையா? ஆம் எனில் அதுவும் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதன் வெளிப்பாடாக அமையலாம்.

நாள்பட்ட சோர்வு உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் சோர்வை ஏற்படுத்தும். மிதமான உடற்பயிற்சி, நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பை எதிர்கொண்டால் அது அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்திருப்பதற்கான அறிகுறியாக அமையலாம்.

தூங்கி எழுந்த பிறகும், ஓய்வெடுக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாக இருந்தாலோ, தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் அதே நிலை நீடித்தாலோ அது அதிக உடற்பயிற்சி செய்ததால் அனுபவிக்கும் ஆபத்தின் வெளிப்பாடாகும். அடிக்கடியோ அதிகமாகவோ உடற்பயிற்சி செய்வது மூட்டு வலி, எலும்பு முறிவு, மென்மையான திசு காயங்கள் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அமெரிக்க உடற்பயிற்சி கவுன்சிலின் கருத்துபடி, அடிக்கடி ஏற்படும் காயம் உடலில் ஏதோ தவறு நடந்ததற்கான அறிகுறியாகும்.

சில நேரங்களில், கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால், அது எடை அதிகரிக்க வழிவகுக்கும். அதிகமாக உடற்பயிற்சி செய்வது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கும், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்பதால் உடல் பருமன் பிரச்னை உண்டாகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் பெரும்பாலும் தசை திசுக்களின் இழப்பு, எடை அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான தொப்பை, கொழுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். அதிக பயிற்சியினால் தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். அதனால் தூக்கம் பாதிப்புக்குள்ளாகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT