நமது உடலுக்கு ஒரு உருவத்தைத் தந்து பலவித இயக்கங்களையும் புரியவல்ல எண்ணற்ற எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை. அதன் ஒரு பகுதியாக நாம் உணவாக எடுத்துக்கொள்ள வேண்டிய பானங்கள் ஐந்தினைக் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
எலும்புகளின் ஆரோக்கியம் காக்க அருந்த வேண்டிய பானங்களில் பிரதானமானது பால். அது பசும்பால், பாதம் பால், தேங்காய்ப் பால், சோயா மில்க் என எந்த பாலாக இருந்தாலும் நலம். அவற்றில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் A, D ஆகியவை எலும்புகளுக்கு நல்ல பலம் தருபவை.
இரண்டாவதாக வருவது பசலை, காலே, அருகுலா, லெட்டூஸ், சார்டு போன்ற அடர் பச்சை நிறம் கொண்ட கீரைகளின் இலைகளால் தயாரிக்கப்படும் ஸ்மூத்தி. இதில் எலும்புகளுக்கு ஆரோக்கியம் தரும் கால்சியம், வைட்டமின் C, K, ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன.
கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் C, K, ஃபோலேட் ஆகிய சத்துக்களை அதிகளவில் கொண்டுள்ள ப்ரோக்கோலி ஜூஸ் அருந்துவதால் எலும்புகளுக்கு அதிக பலம் சேர்வதுடன், கேன்சரை உருவாக்கும் செல்களின் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது. மேலும், பற்சொத்தை ஆவதும் தடைபடும்; உயர் இரத்த அழுத்தம் சமநிலைப்படும்; எடை குறைப்பிற்கும் உதவும் இந்த ஜூஸ்.
ஆரஞ்சு சாறில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்துகிறது. வைட்டமின்கள் தசைகளுக்கும் உறுப்புகளுக்கும்ஆரோக்கியம் பெறத் தேவையான சத்துக்களை வழங்குகின்றன.
க்ரீன் டீயிலுள்ள கேட்டச்சின் என்னும் தனித்துவமான கூட்டுப்பொருள் எலும்புகளைப் பலப்படுத்துகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் எலும்பு சேதமடைவதைத் தடுக்கிறது.
மேற்கூறிய பானங்களை அடிக்கடி அருந்தி இயற்கை முறையில் எலும்புகளைக் காப்போம்!