நம்மில் பலருக்கும் உடல் பருமனைக் குறைப்பதென்பது ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது. இரண்டு மூன்று பேர் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் அதைப் பற்றிப் பேசாமல் பிரிந்து செல்வதென்பது ஓர் அபூர்வ நிகழ்வாகவே இருக்கும். வெற்றிகரமாக எடை குறையச் செய்ய, எளிதாக தயாரித்து வெறும் வயிற்றில் அருந்தக்கூடிய ஐந்து வகை பானங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
கேரட்டை தோல் சீவி, துருவி கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில் மசிய அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது எடை குறைய உதவும். கேரட்டில் உள்ள அதிகளவு நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து நீண்ட நேரம் பசியுணர்வு வராமல் தடுக்கும்.
மேலே கூறிய முறையில் பீட்ரூட்டை அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதும் எடை குறைய உதவும். பீட்ரூட் ஜூஸ் மெட்டபாலிசத்தை உயர்த்தி ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிறது. நீண்ட நேரம் பசியுணர்வு வராமல் தடுக்கிறது.
நெல்லிக்காயை நறுக்கி மிக்ஸியில் மசிய அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது எடை குறைய உதவுவதோடு நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. அதிகளவு நோயெதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குக் கொடுக்கிறது.
கொஞ்சம் செலரியை நறுக்கி மசிய அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதும் உடல் எடை குறையச் செய்யும். செலரி அதிக ஊட்டச்சத்து நிறைந்த வெஜிடபிள். அதிலுள்ள நார்ச்சத்து பசியுணர்வு வருவதைத் தடுத்து அதிக நேரம் உடலை சக்தியுடன் இயங்கச் செய்கிறது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை சாற்றைப் பிழிந்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருக, எலுமிச்சையிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் எடை குறைப்பிற்கு உதவி செய்வதோடு, கொழுப்புகளை எரித்து மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும் துணை புரிகின்றன.
எடை குறைப்பிற்கு சரியான முறையில் உதவக்கூடியதும், எளிதாக வீட்டிலேயே கிடைக்கக்கூடியதுமான சாதாரண பொருட்களைக் கொண்டு இந்த ஜூஸ்களை அடிக்கடி தயாரித்துப் பருகி ஊட்டச் சத்து குறையாமல் எடையைக் குறைத்து நலம் பெறுவோம்.