சாப்பிட்டது ஜீரணமாகாமல் சில சமயம் நாம் சிரமப்படுவோம். அது ஏன் ஜீரணிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் உணவை உண்டால் ஜீரணிப்பது எளிது. அப்படி சாப்பிட்ட உணவு ஜீரணிக்காதபொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்!
பழங்களை, உணவு சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு சாப்பிட்டால், அதன் பிறகு சாப்பிடும் உணவு செரிப்பதற்கு சிரமம் இருக்காது. அதை விடுத்து இரண்டையும் சேர்த்து சாப்பிடும்பொழுதுதான் செரிமான பிரச்னை ஏற்படுகிறது.
சமைக்காத உணவை முன்பும் சமைத்த உணவை பின்பும் உண்ணுங்கள். இப்படி உண்ணும்பொழுது சாப்பிடும் அளவும் குறையும். ஊளை சதை ஏற்படாது. செரிமான தொந்தரவு இருக்காது.
திரவ உணவை உணவுக்கு முன்பும் திட உணவைப் பின்பும் எடுத்துக் கொள்வது நல்லது. சூப்பை சாப்பாட்டிற்கு முன்பு சாப்பிடுவதே செரிமான சக்தியை தூண்டுவதற்குத்தான்.
உணவை ஆற அமர அமர்ந்து ரசித்து ருசித்து நிதானமாக மென்று சாப்பிடவும். அரைகுறையாக மென்று அவசர அவசரமாக விழுங்கும்போதுதான் செரிமான பிரச்னை ஏற்படுகிறது. நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம் என்பதை நினைவில் கொள்க!
பசித்தால் மட்டும் சாப்பிடுவது நல்லது. பசித்தாலும் பசிக்கவில்லை என்றாலும் உணவு ருசியாக இருக்கிறது என்பதற்காகவோ, நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதற்காகவோ பசிக்காமல் இருக்கும்பொழுதே சாப்பிட்டால் செரிமானம் ஆகாது. அதனால் காலையில் சாப்பிட்டது நன்கு ஜீரணித்த பிறகு மதிய உணவை எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை. நன்கு பசித்தால் மூன்று வேலைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. நான்கு, ஐந்து வேளையாக பிரித்து உணவை சாப்பிடலாம். இதனால் ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.
தேவைக்கு மேல் உண்ணுவதை தவிர்க்கவும். பல்வேறு உணவு வகைகளை செய்து வைத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தால் எல்லாவற்றையும் ருசி பார்க்க ஆரம்பிப்போம். அப்பொழுது சாப்பாட்டின் அளவு கூடிப்போகும். நம்மை அறியாமலேயே தேவைக்கு மேல் சாப்பிட்டு விடுவோம். ஆதலால், தேவையான அளவு சமைத்து, நிறைய வகை உணவுகள் செய்யாமல், பழையது எதையும் புதிய சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடாமல் இருந்தால் செரிமான பிரச்னை வராது.
அளவைக் குறைத்து நல்ல உணவை உண்ண வேண்டும். பழ ஜூஸ், மில்க் ஷேக், டிரை ஃப்ரூட்ஸ், ஷேக் போன்றவற்றை அருந்தினால் அது செரிமானம் ஆவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். இதுபோன்ற உணவுகள் சத்தானவை. கலோரி மிகுந்தவை ஆதலால் அப்படி அருந்தியவை நன்றாக ஜீரணித்த பிறகு, பசி எடுக்கும்பொழுது குறைவான அளவு சாதம் அல்லது சப்பாத்தியுடன் காய்கறிகளை அதிகமாக உண்ணலாம்.
கவலை, சோர்வு இருக்கும்போது உண்ணுவதை தவிர்க்கவும். படிக்கின்ற குழந்தைகளுக்கு இது ஒரு பெரும் பிரச்னை. பரீட்சைகளின்போதும் வீட்டுப்பாடங்கள் அதிகம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்பொழுதும் படிக்கின்றவர்களுக்கு கவலை, சோர்வு வரும். அப்பொழுது குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதைக் காணலாம். சில குழந்தைகள் நன்றாக சாப்பிட மாட்டார்கள். சில குழந்தைகள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆதலால் இதுபோன்ற சமயங்களில் நொறுக்கு தீனியிலிருந்து எல்லாவற்றையும் அளவுடன் கொடுப்பது நல்லது. பெரியவர்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு உண்ணலாம். நடந்து முடிந்த நெருக்கடியான நெருடலான பிரச்னைகளைப் பற்றி சாப்பிடும்போது சிந்திக்காமல் இருந்தால், கவலை, சோர்வின்றி சாப்பிடலாம். இதனால் சாப்பாட்டின் அளவும் குறையும்.
சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருந்தால் கொஞ்சம் சீரகத்தை வாயில் போட்டு, சிறிது சுடு தண்ணீர் குடித்தால் உண்ட உணவு ஜீரணம் ஆகி விடும். மேலும், சீரகத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை குடித்தாலும் ஜீரணம் ஆகும். ஓம வாட்டர் குடித்தாலும் ஜீரணமாகும். நிறைய தண்ணீர், வெந்நீர் அருந்தினாலும் ஜீரணம் ஆகும். வெல்லத்தை நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை குடித்தாலும் ஜீரணம் ஆகும். சாப்பிட்டதும் வாழைப்பழம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும். மலை வாழைப்பழம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். உடல் சூட்டை தணித்து மலச்சிக்கலை போக்கும்.
இதுபோன்ற விஷயங்களை பின்பற்றினாலே செரிமானம் துரிதமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.