நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களில் இரும்புச் சத்தும் ஒன்று. இரத்தத்தின் சிவப்பு அணுக்களிலிருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யத் தேவையான ஊட்டச் சத்து இது.
இதன் அளவு சமநிலையில் இருந்தால்தான் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை குறைவின்றி இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இரும்புச் சத்தை சம நிலையில் வைப்பதற்கு நாம் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
அதிகளவு புரோட்டீன், இரும்புச் சத்து, ஃபோலேட், காப்பர், மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்களைக் கொண்டது குயினோவா. ஒரு கப் சமைத்த குயினோவாவில் சுமார் 2.8 mg இரும்புச் சத்து உள்ளது.
ஒரு கப் சமைத்த அமராந்த் என்ற க்ளூட்டன் ஃபிரி தானிய உணவில் 9 g புரோட்டீனும் 5.17 mg இரும்புச் சத்தும் உள்ளது.
அதிகளவு புரோட்டீன், இரும்புச் சத்து, நார்ச் சத்துக்கள் கொண்ட பருப்பு மற்றும் பயறு வகைகளை உண்ணும்போது, ஒரு கப் சமைத்த பருப்பிலிருந்து 6.6mg இரும்புச் சத்து கிடைக்கிறது.
நூறு கிராம் அளவு சியா விதைகளிலிருந்து 7.7 mg, நூறு கிராம் அளவு முந்திரிப் பருப்பிலிருந்து 6.68 mg இரும்புச் சத்து கிடைக்கிறது. இது, இதே அளவு பசலைக் கீரையிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விட அதிகம். இவ்விதைகளை அப்படியே கூட சாப்பிடலாம். மற்ற உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.
ஒரு கப் உலர்ந்த ஆப்ரிகாட் பழத்திலிருந்து 4.1mg, 28 g டார்க் சாக்லேட்டிலிருந்து 3.4 mg இரும்புச் சத்து கிடைக்கிறது. பூசணி விதை, பசலைக் கீரை, டோஃபு, துணா (Tuna) ஃபிஷ், புரோக்கோலி ஆகிய உணவு வகைகளிலும் இரும்புச் சத்து அடங்கியுள்ளது.
இரும்புச் சத்து அடங்கியுள்ள உணவுகளை தினசரி உண்போம். அனீமியா நோயிலிருந்து உடலைக் காப்போம்.