அதிக கொழுப்புச் சத்து அடங்கிய உணவுப் பொருட்கள் பொதுவாக, நம் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும். ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற அபாயகரமான நோய்களுக்கு வழி வகுக்கும் என்பது பரவலாக நிலவி வரும் கருத்து. ஆனாலும், நம் உடலானது ஊட்டச்சத்துக்களை உள்ளுறிஞ்ச நல்ல கொழுப்பின் உதவி அத்தியாவசியமாகிறது. எனவே, நாம் உட்கொள்ளும் மற்ற உணவுகளுடன் கொழுப்புச் சத்து அடங்கிய உணவுகளையும் சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது. அவ்வாறான கொழுப்பு சத்து அடங்கிய உணவுப் பொருட்கள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆலிவ் ஆயில்: இந்த எண்ணெய் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அடங்கியது. இது இதய நோய் வராமல் பாதுகாக்கும். மூளை ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
நட்ஸ்: பாதம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைகள் அதிகமான நல்ல கொழுப்பு அடங்கிய உணவுப்பொருள்கள். நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்களை உள்ளடக்கியவை. வீக்கத்தை தடுத்து கொலஸ்ட்ரால் அளவை சமன்படுத்தும். எடை குறைப்பிற்கு உதவி புரிபவை.
மீன்: சால்மன், பாரை, மத்தி, ட்ரௌட் போன்ற மீன்களிலுள்ள அதிகளவு ஒமேகா-3 கொழுப்பானது டயாபெட், கேன்சர் போன்ற நாள்பட்ட வியாதிகள் வருவதை தடுக்கின்றன. வீக்கத்தை தடுத்து, மூளை மற்றும் இதய ஆரோக்கியம் காக்கும்.
விதைகள்: சியா, பிளாக்ஸ், ஹெம்ப் போன்ற விதைகள் ஒமேகா-3, நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்தவை. இவை இதய ஆரோக்கியம் காக்கும். செரிமானத்தை சீராக்கும். வீக்கத்தை குறைக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
ஃபுல் ஃபேட் யோகர்ட்: நல்ல கொழுப்பு, கால்சியம், புரோட்டீன், ப்ரோபயோட்டிக்ஸ் கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒட்டுமொத்த ஜீரண உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்கும். எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும்.
தேங்காய்: தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் சேர்த்த உணவுகள் உடனடி சக்தி தரும். எடை குறைப்பிற்கும், மூளை ஆரோக்கியத்திற்கும் இவை உதவும்.
சீஸ்: அதிக கலோரி கொண்டது. குறைவாக எடுத்துக்கொள்வது நலம். காட்டேஜ் சீஸ், ஃபீட்டா, மொஸரெல்லா போன்ற சீஸ் வகைகளில் கால்சியம், வைட்டமின், அதிக கொழுப்பு அடங்கியுள்ளது. நல்ல ஊட்டச்சத்து அளித்து எலும்புகளின் ஆரோக்கியத்தையும் காக்கும்.
முட்டை: இதன் மஞ்சள் கரு, வைட்டமின், மினரல்ஸ், தரமான புரோட்டீன், நல்ல கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியது. மூளை ஆரோக்கியத்திற்கும் எடை குறைப்பிற்கும் உதவும்.
மேலே குறிப்பிட்ட உணவுகளை தேர்ந்தெடுக்கையில் ஒவ்வொரு தனி மனிதரின் ஆரோக்கியம், உணவு முறை, தேவை, சமமான மனநிலை, வயது ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்வது நலம்.