மாதவிடாய் நேரத்தில் சிலருக்கு முடி கொட்டும், அது ஏன் என்று அவர்களுக்கு தெரியாது. அந்தவகையில் மாதவிடாய் நேரங்களில் முடி பாதிப்பு ஏற்படுவது ஏன் என்று பார்ப்போம்.
பொதுவாக மாதவிடாய் நேரத்தில் பெண்களின் ஹார்மோன்களில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். ஆகையால், மூட் ஸிவிங் போன்ற நிறைய விஷயங்களை சந்திக்க நேரிடும். அதில் ஒன்றுதான் முடி பாதிப்பு. மாதவிடாய் நேரத்தில் உங்கள் தலையில் எண்ணெய் பிசுக்காக இருப்பதை உணர முடியும். மேலும் முடி உதிர்வும் அதிகரிக்கும். இந்த ஆபத்துக்கள் சருமத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றாலும், முடி உதிர்வாகிறதே, அது போதாதா?
பொதுவாக முடியின் ஆரோக்கியத்திற்கு மனநிலையும் காரணமாகும். ஆம்! அதாவது ஒருவர் அதிகப்படியான மன உளைச்சலில் இருக்கும்போது முடி உதிர்வும் அதிகமாகும். ஆகையால், எப்போதும் ரிலாக்ஸாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மாதவிடாய் காலங்களில் என்னத்தான் ரிலாக்ஸாக இருக்க முயற்சித்தாலும், மூட் ஸ்விங் காரணமாக மன அமைதி கெடும். அப்போது முடி உதிர்வு ஏற்படுவதை நம்மால் தடுக்கவே முடியாது.
மாதவிடாய் நேரத்தின் தொடக்க காலத்தில் ஈஸ்ட்ரஜன் சுரப்பு உடம்பில் குறைகிறது. அடுத்தடுத்த நாட்களில் படிபடியாக அதிகரிக்கும் என்றாலும், கடைசி கட்டத்தில் மட்டும்தான் எப்போதும்போல் இயல்பாக சுரக்கும். முடி ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கை ஆற்றுவது ஈஸ்ட்ரஜன் சுரப்பே. ஆகையால், இதன் உற்பத்தி குறையும்போது, முடி வறண்டு காணப்படும்.
அதேபோல், ரத்தப்போக்கு ஏற்படும்போது உடம்பில் இரும்புச்சத்தும் குறையும். சிலருக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படும்போது அதிகமாக இரும்புச்சத்து குறையும். இதன் விளைவாக முடி உதிர்வு, முடி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இரும்பு சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்க முடியும்.
மாதவிடாய் சுழற்சியின் 14 வது நாளில் இந்த அண்ட விடுப்பு ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் நமது கருப்பையில் உள்ள வளர்ந்த முட்டை செல்கள் வெளியிடப்படுகின்றன. அதே நேரத்தில் அண்டு விடும் போது அதிக ஈஸ்ட்ரஜன் உற்பத்தி செய்யப்படுவதால் முடிவு உதிர்வு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.
ஆகையால், மாதவிடாய் நேரங்களில் முடி உதிர்வு ஏற்படுவது சகஜம்தான். ஆனால், நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன்மூலம் முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.