இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது பெரும்பாலான நபர்களைத் தாக்கும் ஒன்றாக உள்ளது. உடலின் ரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பது, நம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களித்து, நீரிழிவு நோயால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கிறது. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இயற்கையான முறைகளைப் பின்பற்றுவது நல்லது. அந்த வகையில், கிராம்பு எந்த அளவுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் பங்காற்றுகிறது என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ரத்த சக்கரை: ரத்த சர்க்கரை அல்லது ரத்த குளுக்கோஸ் என்பது ரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் குறிக்கிறது. அதிக ரத்த சர்க்கரை அளவு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த முடியாதபோது, இன்சுலின் உற்பத்தி குறைந்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
கிராம்பு: Syzygium Aromaticum என்ற மரத்தின் பூக்களிலிருந்து கிடைக்கும் கிராம்பு, பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல உயிரியக்க சேர்மங்கள் நிறைந்துள்ளதால், அழற்சி எதிர்ப்பு, ஆக்சிஜனேற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே கிராம்பு ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உதவுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கிராம்புகளில் காணப்படும் சில சேர்மங்கள் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இதனால் செல்களின் ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து, குளுக்கோஸ் உறிஞ்சுதல் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த விளைவால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
கிராம்புகளில் உள்ள சேர்மங்கள், கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தில் ஈடுபடும் சில நொதிகளின் செயல்பாட்டைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நொதிகளைத் தடுப்பதன் மூலமாக கார்போஹைட்ரேட் உறிஞ்சுதல்கள் உடலில் மெதுவாகலாம். இது உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.
நாள்பட்ட உயர் ரத்த சர்க்கரை அளவு, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, செல்களை சேதப்படுத்தும். கிராம்பில் இருக்கும் சில சேர்மங்கள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதன் மூலமாகவும் ரத்த சர்க்கரை அளவு நிர்வகிக்கப்படுகிறது.
கிராம்பு ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உதவுகிறது என்றாலும், இவற்றை மிதமாகவே உட்கொள்வது அவசியம். கிராம்பை அதிகமாக எடுத்துக்கொண்டால், சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைத் தாண்டி அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இத்தகைய இயற்கை வைத்திய முறைகள் ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபடும். எனவே உங்களது ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் கிராம்பு சாப்பிட முடிவெடுப்பதற்கு முன், ஏதேனும் சுகாதார நிலைமைகளை சந்தித்து வந்தால், நல்ல சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொண்டு சாப்பிடுவது நல்லது.