பார்லி 
ஆரோக்கியம்

வாற்கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள்!

எஸ்.மாரிமுத்து

'வாற்கோதுமை' என்பது பார்லியின் தமிழ் பெயர். பார்லியை  நோய்க்கால உணவாக நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். கிராமத்தில் நம் முன்னோர்கள் கடும் காய்ச்சலாலோ அல்லது வயிற்றுப்போக்கினாலே உடல் பாதிக்கப்பட்டால் உடனே கைப்பிடி வாற்கோதுமையை கஞ்சியாக காய்ச்சித் தருவார்கள். அதை சாப்பிட்ட உடன் உடலில் சலைன் வாட்டர் ஏற்றியது போல உற்சாகம் தரும்.

தானிய வகைகளில் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது வாற்கோதுமை. இந்த தானியத்தில் டெக்ஸ்ட்ரின் என்ற ஸ்டார்ச் நிறைந்துள்ளதால், அது செரிமானத்தை சீராக்கும். இதில் வைட்டமின் சி சத்தும், ஆன்டி ஆக்சிடன்ட்களும் உள்ளதால், அதிலுள்ள சத்துகள் உடனடியாகக் கிடைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

சரும நோய்கள் மற்றும் ஒவ்வாமைக்கும் வாற்கோதுமை நல்ல ஊட்டச்சத்தாகத் திகழ்கிறது. இரத்த சோகைக்கு இது மிகச்சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. இதில் உள்ள பி12, இரும்புச் சத்து இரத்த சோகையை ஈடு செய்ய உதவுகிறது. இது மட்டுமின்றி, தொண்டை சார்ந்த பிரச்னைகள், சருமம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும்.

மூச்சிரைப்புப் பிரச்னை, சளி, இருமல், தண்ணீர் தாகம் அதிகம் உள்ளவர்கள், சிறுநீர் எரிச்சல், நாவறட்சி இருப்பவர்கள் இதனை கஞ்சியாக்கி மோர், உப்பு அல்லது பால், சர்க்கரை சேர்த்து குடிக்க வயிற்றுக்கு இதம் தரும்.

இந்த தானியப் பயிர் அதிக வெப்பத்தையும், அதிக குளிர்ச்சியையும் தாங்கக் கூடியது. எல்லா தட்ப வெப்பங்களிலும் விளையும் தன்மை கொண்டது. திபெத் பகுதியில்தான் இது முதன் முதலில் விவசாயப் பயிராக விளைவிக்கப்பட்டது. இது இப்போது உலகளவில் அதிகம் பயிரிடப்படும் ஐந்து தானியங்களில் ஒன்றாக விளங்குகிறது.

முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக இது திகழ்கிறது. வாரத்தில் 2 நாட்களாவது உணவில் இதை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தன்வந்திரி நிகண்டு, கையதேவ நிகண்டு ஆகிய ஆயுர்வேத நூல்களில் வாற்கோதுமை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாற்கோதுமை உற்பத்தியில் இந்தியா 28வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சூப் மற்றும் கஞ்சியாக வைத்துக் குடித்தால் உடலுக்கு மிக நல்ல பலன் தரும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT