பீட்ரூட் கொய்யா செடிகள் அரிதானவை. பீட்ரூட் சதையின் நிறத்தை ஒத்த பீட்ரூட் கொய்யா பழங்கள் ருசியானவை மற்றும் சத்தானவை. இந்தப் பழங்கள் ஊதா சிவப்பு நிறத்தில் இருப்பதுடன் பட்டை, இலைகள், பூக்கள் கூட ஊதா சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த கொய்யாப் பழங்கள் நாட்டு பாதாம் பழங்களைப் போல் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.
பீட்ரூட் நிற கொய்யாப் பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாகவே, கொய்யாப்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றில் உள்ள ஃபோலேட் மலட்டுத் தன்மையை நீக்கி இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை இயல்பான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். இது புரோஸ்டேட் மற்றும் மார்பகங்களில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது. கொய்யாப் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கிளைசெமிக் இண்டெக்ஸ் இரத்த சக்கரையை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைப்பதுடன் நல்ல கொழுப்பின் (எச்டிஎல்) அளவையும் உயர்த்துகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் பீட்ரூட் நிற கொய்யாக்களில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. கண் புரை, இரவு குருட்டு தன்மை மற்றும் பார்வை பிரச்னைகள் வராமல் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொய்யாவில் உள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி இரண்டும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது. கருவுற்ற தாய்மார்களுக்கு கரு நன்றாக வளர கொய்யா உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்யும் கொய்யாப்பழம் ஏழைகளுக்கும் எளிதாகக் கிடைக்கும் கனிகளில் ஒன்று. கொய்யா பழம் மற்றும் அவற்றின் இலைகள் பல் வலிக்கு உதவுகிறது. இந்தப் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்று நோய்களை எதிர்த்து நிற்கவும், கிருமிகளை கொல்லவும் உதவுகின்றன.
பீட்ரூட் நிற கொய்யா எல்லா இடங்களிலும், எல்லா வெப்ப நிலைகளிலும் வளரக்கூடியது. இதனை தோட்டத்திலும் வளர்க்கலாம், மாடியிலும் வளர்க்கலாம். கொய்யாப் பழங்களை அப்படியே சாப்பிடலாம் அல்லது அவற்றுடன் தண்ணீர் கலந்து கொய்யா பழ ஜூஸ் தயாரித்து அருந்தலாம். கொய்யாவை நறுக்கி மற்ற பழங்களுடன் கலந்து பழ சாலடாகவும் உண்ணலாம். கொய்யா இலைகளைக் கொண்டு டீ தயாரித்து பருகலாம். இதில் நிறைய மருத்துவ நன்மைகள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகளும் கொய்யாபழத்தை தாராளமாக சாப்பிடலாம். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது. இதில் உள்ள அதிக நார்சத்து இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். நம்ம ஊர் கோடை வெயில், மழைக்கு ஏற்றவாறு விளையும் பீட்ரூட் நிற கொய்யாப் பழங்களில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதால் நிறைய பேர் இந்த பழ மரங்களை தங்கள் தோட்டத்திலும், மாடி தோட்டத்திலும் வைத்து வளர்க்கிறார்கள்.