இந்தியாவில் விளையும் மிகவும் பொதுவான வெப்பமண்டல காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் இது ‘காய்கறிகளின் ராஜா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இது தவிர, இதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது மாலிப்டினம், பொட்டாசியம், வைட்டமின் கே, மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் நியாசின் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். புற்று நோயை தடுக்கும் ‘குரோஜனிக் அமிலம்’ இதில் அதிகமுள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இந்த காய்கறி பெரும்பாலும் உணவுடன் சமைத்து உட்கொள்ளப்படுகிறது.
டயட் இருப்பவர்கள் கத்தரிக்காயை அதிகம் எடுத்து கொள்ளலாம். காரணம் ஒரு கப் கத்தரிக்காயில் 35 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளது. இதை அடிக்கடி உண்பதால் எடை சீராக இருக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.
கத்தரிக்காயில் போதிய அளவு இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளன. இதனால் எலும்புகள் வலிமை பெறும். மேலும், கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டும். உடலில் நோய் எதிப்புச் சக்தியை அதிகரித்து சளி, இருமலைக் குறைக்க உதவும். கத்தரிக்காயின் கருநீலத் தோலிலிருக்கும் பாலிபீனால்களில் கிடைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும். இதன் விதைகளும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டவை.
உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து வைட்டமின் சத்துக்களும் இந்த கத்தரிக்காயில் நிறைந்துள்ளன. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இத கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. பசியின்மையை நீக்குகிறது. உடல் சோர்வடைவதைக் குறைக்கிறது. மூச்சு விடுதலில் சிரமம், சருமம் மரத்துவிடுவது போன்ற பிரச்னைகளையும் குறைக்கிறது. நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும் கத்தரிக்காய் உதவும்.
பொதுவாக, அடர் நீலத்தில் இருக்கும் கத்தரிக்காயின் நிறம், வெள்ளை, பச்சை என பல நிறங்களில் இடம், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மாறுகிறது. கத்தரிக்காயின் நிறம் மட்டுமல்ல, அதன் வடிவமும் இடத்திற்கு இடம் மாறுபடும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த ஊதா நிற கத்திரிக்காய் சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இருதய நோய் அபாயத்தை குறைக்கவும் இந்தக் கத்தரிக்காய் உதவுகிறதாம்.
ஆன்டி ஆக்ஸிடன்ட் மட்டுமல்ல, நீல கத்தரிக்காயில் வலி நிவாரண குணமும் இருக்கிறது. அதேபோல, அதிகக் காய்ச்சலை குறைக்கும் மந்திரமும் இந்தக் கத்தரிக்காயிடம் இருக்கிறது. இது மட்டுமா? வீக்கத்தைக் குறைக்கும் திறன், ஆஸ்துமா எதிர்ப்பு, கொழுப்பைக் குறைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, செரிமான அமைப்புக்கு நன்மை பயப்பது என இது பல மருத்துவப் பண்புகள் நிறைந்துள்ள பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது.
பச்சை நிறக் கத்தரிக்காய் சந்தையில் ஏராளமாகக் கிடைக்கிறது. அதேசமயம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பச்சை கத்தரிக்காயை சாப்பிடுவதால் வாயு பிரச்னை, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை இருக்காது. எனவே, உங்கள் வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தால், பச்சை நிறக் கத்தரிக்காயை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
பச்சை நிறக் கத்தரிக்காயை சாப்பிடுவது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனென்றால், உடலில் கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம், இதய நோயைக் குணப்படுத்தும். எனவே, இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், பச்சை கத்தரிக்காயை சாப்பிடுவது நல்லது. பச்சை கத்தரிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுவதோடு, பருவகால நோய்களிலிருந்தும் விடுபடலாம்.
பச்சை கத்தரிக்காயை சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை குறைக்கலாம். ஏனெனில், இதில் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால் கத்தரிக்காயை தினமும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் இது.
வெள்ளை நிற கத்திரிக்காய் குறைந்த கலோரி கொண்டது. நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸினேற்றங்கள் இதில் நிறைந்துள்ளன. இதிலுள்ள, ‘அந்தோசயினிகள்’ ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது. இதயநோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இது குறைக்ககிறது. இதிலுள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கிறது.
முற்றிய பெரிய காய்களை சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இதுவென்பதால், மழை நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம். கத்தரிக்காய் சாப்பிடும் சிலருக்கு அவரின் உடம்பின் தன்மைக்கு ஒத்துப்போகாமல் அலர்ஜியை உண்டாக்கலாம். உடம்பில் சொறி, சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.