Health benefits of drinking chia seeds with ajwain water 
ஆரோக்கியம்

அஜ்வைன் வாட்டருடன் சியா விதைகள் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ரு வருடத்தில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளி பண்டிகை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் நோன்பு, மஹாலட்சுமி பூஜை என அனைத்தையும் கொண்டாடி முடித்துவிட்டு 'அப்பாடா' என அமர்ந்திருப்போம். இப்பத்தான், பண்டிகை நேரங்களில் அளவின்றி சாப்பிட்டு வைத்த பலகாரங்கள் வயிற்றுக்குள் தங்கள் வேலையை ஆரம்பிக்கும். அசிடிட்டி, வயிறு உப்புசம், வாய்வு போன்ற அனைத்து கோளாறுகளும் வந்து  இம்சிக்க ஆரம்பிக்கும். இதற்கு நம் முன்னோர்கள் ஓமத்தை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி அந்த நீரை அருந்தி குணமடைந்து வந்தனர். தற்போதைய ட்ரெண்டிங் ஓம வாட்டருடன் ஊற வைத்த சியா விதைகளை சேர்த்து அருந்துவதாகும். இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும்போது கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பன்மடங்காகிறது. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

ஓமம் ஆரோக்கிய நன்மைகளின் பவர் ஹவுஸ் என்பர். இதிலுள்ள நார்ச்சத்து சிறப்பான செரிமானத்துக்கு உதவும். மேலும், வாய்வு மற்றும் வீக்கங்களையும்  குறைக்கும். இதில் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்ட தைமோல் (Thymol) என்றொரு கூட்டுப் பொருள் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலின் மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். மேலும், அஜ்வைன் (Ajwain)  மூச்சுப் பாதை அழற்சி, இருமல் போன்றவற்றை குணமாக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், மெட்டபாலிச ரேட்டை உயர்த்தவும் உதவும்.

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, தாவர வகைப் புரோட்டீன், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியம் காக்கவும், செரிமானம் சிறக்கவும், வீக்கங்கள் குறையவும், இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படவும், எலும்புகள் வலுவடையவும் உதவும்.

இனி, ஓம வாட்டரில் சியா விதைகளை ஊற வைத்து சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

ஓமம் வயிற்று வலி, வயிறு வீக்கம் மற்றும் வாய்வு போன்றவற்றை நீக்க பெரிதும் உதவும். சியா விதைகளிலுள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமானம் சிறக்க உதவும். சியா விதைகள் நீரை உறிஞ்சி தன்னுள் வைத்து ஒரு ஜெல் போன்ற உருவை உண்டாக்கிக்கொள்ளும். இதனால் உடல் நீரேற்றம் பெறுவதுடன் சரும ஆரோக்கியமும் கூடும். சியா விதைகளிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன் மற்றும் கனிமச் சத்துக்கள் ஓம வாட்டரில் உள்ள ஊட்டச் சத்துக்களின் அளவை உயர்த்தவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

சியா விதைகளிலுள்ள அதிகளவு நார்ச்சத்து வயிற்றில் அதிக நேரம் தங்கி பசியுணர்வு ஏற்படும் நேரத்தை தள்ளிப்போகச் செய்யும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து உடல் எடை கூடாமல் பராமரிக்க முடியும். இதே நேரம் அஜ்வைன் செரிமானக் கோளாறு ஏதும் உண்டாகாமல் பாதுகாக்கும்.

அஜ்வைன் மற்றும் சியா விதைகளிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் குணமானது ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். இவை இரண்டிலுமுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது மெட்டபாலிச ரேட்டை உயர்த்தவும் உடலின்  ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

அஜ்வைன் - சியா வாட்டர் செய்முறை: இரண்டு டேபிள் ஸ்பூன் நீரில் இரண்டு டீஸ்பூன் சியா விதைகளை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். நீரின் நிறம் மாறி, அஜ்வைனின் மணம் நன்கு தண்ணீரில் கலந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். நன்கு ஆறியதும் ஊறிய சியா விதைகளை அதனுடன் சேர்த்து அருந்தவும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT