முறையான உடல் உழைப்பு இல்லாதவர்கள் அனைவரும் தினமும் ஏதாவதொரு உடற்பயிற்சியை மேற்கொள்வது அத்தியாவசியம். இதற்கு அனைவராலும் பரிந்துரைக்கப்படுவது நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி செய்வதால் இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் சுறுசுறுப்படையும். நடைப்பயிற்சிக்கு இணையான பலனைத் தருவது சைக்கிளிங் எனலாம். சுறுசுறுப்புடனும் வேகமாகவும் சைக்கிள் ஓட்டுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் தாராளமாக அதிகாலையில் சைக்கிளிங் செய்யலாம். இதனால் கிடைக்கும் 7 அதிசயிக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. அதிகாலை சைக்கிளிங் மெட்டபாலிஸ ரேட்டை உயர்த்தும். இதன் மூலம் நாள் முழுவதும் கலோரிகளை எரிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
2. நாள் தவறாமல் தினமும் அதிகாலையில் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை சைக்கிள் ஓட்டுவதைப் பழக்கமாக்கிக் கொண்டால் இதயம் வலுப்பெறும்; இதய ஆரோக்கியம் காக்கப்படும். இரத்த ஓட்டம் சீரான முறையில் பாய்வதால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கோளாறு உண்டாகும் அபாயம் தடுக்கப்படும்.
3. அதிகாலை சைக்கிளிங் என்டோர்ஃபின் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி புரியும். இதனால் ஸ்ட்ரெஸ் மற்றும் மனக் கவலைகள் நீங்கும். மன நிலையில் உற்சாகமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
4. சைக்கிளிங் செய்வதை ஒரு நாளின் முதல் வேலையாக செய்வதற்குப் பழகிக்கொண்டால் அது உடலுக்குள் செல்லும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும். அதன் மூலம் நாள் முழுவதும் வேலை செய்வதற்கான சக்தியும், பரபரப்பான சூழலை எதிர்கொள்ளத் தேவையான ஸ்டெமினாவும் கிடைக்கும்.
5. சைக்கிளிங் அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் சம நிலையில் பராமரிக்க முடியும். மேலும், தசைகள் நல்ல உரம் பெற்று முறுக்குடன் தோற்றமளிக்கும்.
6. தினமும் காலையில் சோம்பலின்றி பதினைந்து நிமிடம் செலவழித்து சைக்கிளிங் செய்வதால் உடற்கட்டு வளமுடன் தோற்றமளிக்கும். மேலும் உடலின் மொத்த ஆரோக்கியம் மேம்படும்.
7. இறுதியாக, சைக்கிளிங் நாம் தூங்கும் முறை (pattern)யிலும் நல்ல மாதிரியான மாற்றத்தை உண்டுபண்ணி ஆரோக்கியம் நிறைந்த மன நலம் பெறவும் உதவும். சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்கள் இப்பயிற்சியை தினமும் மேற்கொண்டு அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் பெறலாம்.