‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது’ என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் எலுமிச்சம் பழம்தான். இது ஒரு அதிசய கனி. களைப்பைப் போக்கி உடனடியாக தெம்பை தரக்கூடியது. வைட்டமின் சி சத்து நிறைந்தது எலுமிச்சம் கனி.
பல்வேறு உடற்பிரச்னைகளைப் போக்கும் எலுமிச்சம் பழம் பித்தத்தைத் தணிக்கிறது, மலச்சிக்கலை தீர்க்கிறது, பல் நோய்களை குணப்படுத்துகிறது, குமட்டல் வாந்தியை நிறுத்துகிறது, வாய் துர்நாற்றத்தை அகற்றுகிறது, சரும நோய்களை குணமாக்குகிறது, தலைவலியை நீக்குகிறது, மிகச்சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது, வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம் தருகிறது, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகிறது, உடல் எடையை குறைக்கிறது.
காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, கல்லீரலை வலிமையோடு வைக்கிறது, நறுமண எண்ணெய் தயாரிப்பிலும், சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது, எலுமிச்சம் பழத்தில் ‘பெக்டின்’ என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்ட இந்தக் கனியை சாறாகவோ, சாலட்களில் பயன்படுத்தியோ தினமும் உபயோகப்படுத்த உடல் வெப்ப சூட்டால் பாதிக்கப்படாது.
பூச்சிக்கடியால் ஏற்படும் அலர்ஜியை போக்க இதனை ஒரு சிறு துண்டு நறுக்கி கடிபட்ட இடத்தில் தேய்க்க நல்ல குணம் தெரிகிறது, முகத்தின் கருமை நீங்க இதனை தேனுடன் கலந்து முகம், கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் தடவி வர, கருமை நீங்கி சருமம் பளிச்சென்று ஆகிவிடும்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி என்னும் இடத்தில் எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. வேறு எங்கும் இதுபோல் தனியான எலுமிச்சை கனிக்கான தினசரி சந்தை நடைபெறுவதாகத் தெரியவில்லை. புளியங்குடி அருகில் உள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் பிடித்துள்ளது. இப்பகுதி எலுமிச்சை பழச்சாறு மற்ற எலுமிச்சைகளை விட அதன் நீர் பதம் (சாறு) குறைய அதிக நாட்கள் ஆகும் என்பது வியப்பான ஒன்றாகும்.