Medjool dates 
ஆரோக்கியம்

மெட்ஜுல் டேட்ஸில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

மெட்ஜுல் டேட்ஸ் (Medjool dates) மொரோக்கோவை பிறப்பிடமாகக் கொண்டது. இது சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நார்த் ஆப்பிரிக்காவின் பாலைவனப் பகுதிகளில் பயணிக்கும் பயணிகளின் முக்கிய உணவாக இருந்துள்ளது இந்தப் பழம். அமெரிக்காவில் யுமா, அரிசோனா மற்றும் கலிஃபோர்னியா ஆகிய இடங்களில் மெட்ஜுல் டேட்ஸ் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் B6, B5, காப்பர், பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதிலுள்ள 6 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நார்ச் சத்து: மெட்ஜுல் டேட்ஸில் டயட்டரி நார்ச் சத்துக்கள் மிக அதிகம். இவை செரிமானம் சிறப்பாக நடைபெறவும் மலச்சிக்கலை நீக்கவும் உதவும். நார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றில் தங்கி பசியுணர்வு ஏற்படும் இடைவெளியை நீட்டிக்கச் செய்யும். இதனால் உட்கொள்ளும் கலோரி அளவு குறைந்து, எடை அதிகரிக்கும் அபாயம் நீங்கும்.

2. ஊட்டச் சத்துக்கள்: இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் மிக அதிகம் நிறைந்துள்ளன. இதிலிருக்கும் வைட்டமின் B6 உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாக்க உதவும்.

3. சக்தி: இயற்கையாகவே இதில் நிறைந்திருக்கும் குளுகோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சக்ரோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் உடலுக்கு உடனடி சக்தியளிக்க உதவுபவை. உடற்பயிற்சிக்கு முன்பு அல்லது பின்பு சாப்பிடுவதற்கு ஏற்றதொரு சிறந்த ஸ்நாக்ஸ் இது. இதிலுள்ள பைட்டோ நியூட்ரியன்ட்கள் என்னும் தாவர அடிப்படையிலான கூட்டுப் பொருட்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

4. ஹார்ட் ஹெல்த்: இதய ஆரோக்கியம் காப்பதில் இணையில்லாதது மெட்ஜுல்! இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும். இதன் மூலம் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு போன்ற எவ்வித கோளாறுகளும் உண்டாகாமல் ஆரோக்கியம் நிறைந்து இயங்குவதற்கு உதவ முடிகிறது. நரம்பு மண்டலத்தின் சிறப்பான இயக்கத்திற்கும் பொட்டாசியம் உதவி புரியும்.

5. ஆன்டி ஆக்ஸிடன்ட்: ஃபிளவனாய்ட் மற்றும் கரோட்டினாய்ட் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மெட்ஜுல் டேட்ஸில் அதிகம் உள்ளன. இவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்துப் போராடவும், உடலின் வீக்கங்களைக் குறைக்கவும் பெரிதும் உதவும்.

6. எலும்புகளின் ஆரோக்கியம்: இதில் நிறைந்துள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, ஆஸ்ட்டியோபொரோஸிஸ் நோய் வரும் அபாயத்தைத் தடுக்க உதவும்.

மெட்ஜுல் டேட்ஸ் நம் உடலின் ஆரோக்கியம் காக்க பல  வகைகளில் உதவக் கூடியது. இதை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. குறைந்த அளவில் எடுத்துக்கொள்வதே நிறைந்த பலனைத் தரும்.

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

SCROLL FOR NEXT