Moringa Water 
ஆரோக்கியம்

மொரிங்கா வாட்டர் அருந்துவதால் சருமம் மற்றும் முடி பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

யற்கை வழங்கும் கொடைகளில் மிகச் சிறந்த கொடை முருங்கை மரம் எனலாம். இது வளர்ப்பதற்கும் உடைப்பதற்கும் மிக எளிதானது. இது நம் உடலின் உள்புற ஆரோக்கியம் மற்றும் வெளிப்புற அழகை மேம்படுத்த மிகவும் உதவும். காலையில் வெறும் வயிற்றில் முருங்கை வாட்டர் அருந்துவதால் நம் சருமம் மற்றும் முடிகளுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முருங்கை இலை மற்றும் அதன் விதைகளில் வைட்டமின் A, C, E ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை  சருமத்தின் அடிப்பகுதியில் உள்ள சுரப்பியில் இருந்து சீபம் (Sebum) என்ற எண்ணெய் போன்ற திரவத்தை உற்பத்தி செய்து சருமம் எப்பொழுதும் ஈரப்பசையுடனும் மினுமினுப்புடனும் இருக்க உதவும்.

முருங்கை இலைகளில் ஸியாடின் (zeatin), குயிர்செடின் (Quercetin) உள்ளிட்ட பல ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை சரும செல்கள், தீங்கிழைக்கும் ஃபிரீரேடிக்கல்களால் சேதமடைவதைத் தடுக்கும். இதனால் சருமத்தில் சுருக்கம், ஃபைன் லைன்ஸ் போன்றவை உண்டாகாமல் இளமைத் தோற்றம் தொடரும். முருங்கையில் உள்ள அமினோ ஆசிட் மற்றும் ஓலீக் (Oleic) ஆசிட்கள் உலர் தன்மையுற்ற சருமத்திற்கு புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் மிருதுத்தன்மையும் தர உதவும்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் C முருங்கையில் உள்ளது. இது பொதுவாக இந்தியர்களின் சருமத்தில் தோன்றக்கூடிய கரும் புள்ளிகள் மற்றும் கருந்திட்டுக்களை அறவே மறையச் செய்யும். முருங்கை இலை உட்கொள்வதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் உண்டாவதில்லை. எந்த விதமான உணவுகளோடும் இதை எடுத்துக்கொள்ளலாம். இதிலிருந்து பெறக்கூடிய நன்மைகள் எந்த வகையான  சருமத்திற்கும் முடிக்கும் ஆரோக்கியம் தரத் தவறுவதில்லை.

புதிதாகப் பறித்த அல்லது உலர்ந்த முருங்கை இலை  அல்லது முருங்கைப் பவுடரை உபயோகித்து மொரிங்கா வாட்டர் தயாரிக்கலாம். கொதிக்கும் நீரில் முருங்கை இலை அல்லது முருங்கைப் பவுடரைப் போட்டு நான்கு நிமிடம் கொதித்தபின் இறக்கி வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்தும்போது முழு பயனும் கிடைக்கும்.

முருங்கைப் பவுடரை ஓட் மீலுடன் கலந்து பேஸ்ட்டாக முகத்தில் போட்டு வைத்து பின் கழுவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு முகம் பளபளப்பு பெறும். எந்த வகையான சென்சிடிவ் சருமத்திற்கும் இது பொருந்தும். ஒரு டேபிள் ஸ்பூன் முருங்கைப் பவுடரை தயிருடன் கலந்து தலை முடி முழுவதும் தடவி வைத்து, காய்ந்த பின் கழுவி விட முடி பளபளப்புப் பெறும். முருங்கைப் பவுடரை நெல்லிக்காய் ஜூஸுடன் கலந்து தலைப் பகுதியில் முடியின் வேர்க்கால்களில் தடவி அழுத்தித் தேய்த்து வர அங்குள்ள நச்சுக்கள் நீங்கி, முடிக்கு ஊட்டச்சத்துக்கள் குறைவின்றிக் கிடைக்கும். முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

எல்லா சீசன்களிலும் தாராளமாகக் கிடைக்கும் முருங்கை இலைகளைப் பயன்படுத்தி மொரிங்கா வாட்டர் தயாரித்து அருந்தி முடியையும் சருமத்தையும் அனைவரும் பளபளப்படையச் செய்யலாமே!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT