பெல் வடிவம் கொண்ட பியர்ஸ் (Pears) பழம் ரோசாசியா (Rosaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஊட்டச் சத்துக்கள் நிறைந்த இப்பழம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மார்க்கெட்டில் அதிகமாகக் கிடைக்கக் கூடியது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து உடலைக் காக்கக்கூடிய பைடோகெமிக்கல் போன்ற பல வகை ஊட்டச்சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன. இதில் ஃபிரக்டோஸ் (Fructose) மற்றும் சோர்பிடால் (Sorbitol) இருப்பதால் இதை குழந்தைகள் உண்ணும்போது சில நேரங்களில் வயிற்றுப்போக்கு உண்டாகும் அபாயம் ஏற்படும். பியர் பழத்தை உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. பியர்ஸில் ஃபிளவனாய்ட் மற்றும் பாலிபினால்ஸ் போன்ற பல வகை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் ஃபிரீரேடிக்கல்களின் அளவை சமநிலைப்படுத்தி இதய நோய், கேன்சர், டயாபெட் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கக்கூடியவை. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி உடலை இவை பாதுகாக்கும். உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும்.
2. பியர்ஸில் உள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்துகளும் இணைந்து ஜீரணம் சிறப்பாகவும் ஸ்மூத்தாகவும் நடைபெற உதவும். நார்ச்சத்து பிரீபயோடிக்காக செயல் புரிந்து ஜீரண மண்டல உறுப்புகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன.
3. பியர்ஸில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது உடலிலுள்ள திரவங்களின் அளவை சமநிலைப்படுத்தும். மேலும், தசைகளின் சுருங்கி விரியும் தன்மை மற்றும் நரம்பு மண்டலத்தின் மூலம் அனுப்பப்படும் சிக்னல்களை ஒழுங்குபடுத்துகிறது. தேவையான அளவு பொட்டாசியம் உடலுக்குக் கிடைக்கும்போது ஸ்ட்ரோக் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது. தசைகளின் அளவு குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. கிட்னியில் கற்கள் உருவாகும் அபாயம் இதனால் குறையும்; எலும்புகளுக்குத் தேவைப்படும் கனிமச் சத்துக்களின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கவும் முடியும்.
4. பியர்ஸில் உள்ள அதிகளவு நீர்ச் சத்தானது இரத்த ஓட்டம் நன்கு நடைபெறவும், உடலின் உஷ்ண அளவை சமநிலைப்படுத்தவும், நச்சுக்களையும் கழிவுகளையும் உடலிலிருந்து வெளியேற்றவும் உதவும்.
5. ஒரு மீடியம் சைஸ் பியர்ஸில் சுமார் 6 கிராம் டயட்டரி ஃபைபர் உள்ளது. இது தேவையான ஊட்டச் சத்துக்களை அளித்து குடல் இயக்கம் சிறப்பாகவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவும். மேலும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், அதிகப்படியாக உள்ள கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் எடைப் பராமரிப்புக்கும் நன்கு உதவும்.
6. பியர்ஸில் வைட்டமின் C சத்தும் உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியம் காக்கவும், கொலாஜன் உற்பத்தியில் பங்கேற்கவும் செய்கிறது. வைட்டமின் C ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு தீங்கிழைக்கும் ஃபிரீரேடிக்கல்கள் மூலம் செல்கள் சிதைவடையாமல் காப்பாற்றுகிறது. இதனால் கேன்சர், இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைக் குறைகிறது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பியர் பழத்தை அதன் சீசனில் தவறாமல் வாங்கி உட்கொண்டு நலம் பெறுவோம்.