சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று வெங்காயம். காரத்தன்மை கொண்ட வெங்காயத்தை பச்சையாக சமைக்காமல் சாப்பிடும்போது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. குடல் இயக்கத்திற்கும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இப்படி அதன் நன்மைகள் பல. விரிவாகப் பார்ப்போமா?
பெண்களுக்கு ஏற்படும் எலும்பு மெலிவு நோயான ஆஸ்டியோபோரோசிஸ்ஸை குணமாக்கும் அரிய உணவு:
சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இடுப்பு எலும்பு மெலிவு, முறிவு நோயையும், எளிதில் உடையக்கூடிய எலும்பு மெலிவு நோயையும் குணமாக்கவல்லது வெங்காயம் என்று கண்டுபிடித்துள்ளனர். லோட்டஸ், தக்காளி, வெள்ளரி, பூண்டு போன்றவையும் எலும்புகளை உறுதியாக்க வல்லவை. ஆனால், வெங்காயத்தை ஒப்பிடும்போது இவையெல்லாம் சாதாரணம்தான்.
"எலும்பு மெலிவைத் தடுக்கும் முக்கியமான கூட்டுப் பொருட்கள் வெங்காயத்தில் உள்ளன. மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவு முறையில் ஆரோக்கியத்தைப் பெருக்கும் சொத்து தினமும் வெங்காயம் சாப்பிடுவதே என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆலீவ் ஆயில், பூண்டு, மீன், முட்டைக்கோஸ் இவற்றுடன் வெங்காயத்தை பச்சையாக சேர்த்துக்கொள்கின்றனர்" என்கிறார் டாக்டர் ரோமன்.
* எல்லா வகையான வெங்காயங்களிலும் சல்ஃபர் உப்பு வகைகள் உள்ளன. இவைதான் இரத்தம் கட்டிப்படாமல் பார்த்துக்கொள்கின்றன.
* சிவப்பு நிற வெங்காயத்தில் குயிர்சிட்டின் என்ற பொருள் இருக்கிறது. இது உடலில் வீக்கம், அலர்ஜி ஏற்படாமலும், மாரடைப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
* சிறிய வெங்காயத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்புச் சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன. இவை இளமை, கண் பார்வை, இரத்த விருத்தி முதலியவற்றைப் பாதுகாப்பதில் சிறப்பான பணியைச் செய்கின்றனவாம்.
* கருப்பைப் புற்று நோய்க்கு வெங்காயம் ஓர் இயற்கை மருந்தாக செயல்படுகிறது என்கிறார்கள் ஜப்பானின் குமமோடோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இதிலுள்ள ஓ.எஸ்.ஏ. எனும் மூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிக்கிறதாம்.
* பச்சை வெங்காயத்தில் 50 வித்தியாசமான சத்துக்கள் இருக்கின்றன. வெங்காயத்தை வெறும் வாயில் மென்று விழுங்குவதால், அது நம்முடைய இரத்தத்தை திரவ நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அதனால் ஹார்ட் அட்டாக் தவிர்க்கப்படுகிறது. பச்சை வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். எனவே, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது.
* வெங்காயத்தை பெண்கள் பச்சையாக மென்று தின்றால் மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள்.
* பச்சை வெங்காயம் வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
* வெங்காயத்தில் குவெர்செடின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
* பச்சை வெங்காயத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதற்கும் பெருமளவு உதவுகிறது.
* குவெர்செடின் நிறைந்த பச்சை வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை உடலில் ஏற்படும் அழற்சியின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
* பச்சை வெங்காயத்தில் சல்பர் நிறைந்த கலவைகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன.
* பச்சை வெங்காயத்தை உட்கொள்வது சரும சுருக்கங்கள், புள்ளிகள் மற்றும் நிறமி அளவைக் குறைக்க உதவுகிறது.
* பச்சை வெங்காயத்தில் குரோமியம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான ஒரு தாதுப்பொருளாகும்.
* வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆஸ்துமா தொல்லையை நீக்கும் அல்லது நிவாரணம் தரும். காரணம் அதிலுள்ள அலர்ஜி எதிர்ப்பு சக்திதான். உடலில் எதிர்ப்பாற்றலை இது 12 மணி நேரம் நீட்டிக்கும் என்கிறார்கள்.
* வெங்காயம் இரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
* வெங்காயத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 10க்கும் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
* மேலும், இதில் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு வெங்காயம் நன்மை பயக்கிறது.
* வெங்காயத்தில் காணப்படும் குவெர்செடின் என்ற சக்தி வாய்ந்த கலவை கேன்சரை தடுப்பதில், குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குடல் கேன்சர்களை தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள்.
முக்கியத் தகவல்: வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட வெங்காயத்தை உரித்தவுடனே சாப்பிட வேண்டும். வெட்டிய வெங்காயத்தை 20 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது. அது விஷக் கிருமிகளை இழுத்து தன் வசப்படுத்திவிடும்.