கோடை வெயில் அனல் வீசத் தொடங்கி விட்டது. இந்தக் கோடையை சமாளிக்கவும் உடலில் சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது. இது மாம்பழ சீசனாக இருப்பதால் நறுக்கிய மாம்பழத் துண்டுகளுடன் முளைகட்டிய பயறு மற்றும் காய்கறிகள் சேர்த்து சாலட் செய்து சாப்பிடும்போது ஆரோக்கியம் நிறைந்த உணவு உட்கொண்ட திருப்தியும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
மாம்பழத் துண்டுகளுடன் முளைகட்டிய பீன்ஸ் மற்றும் வெள்ளரி, தக்காளி, பெல் பெப்பர் போன்ற காய்கறிகள் சேர்த்து உண்பது ஆரோக்கியம் தரும். மாம்பழத்தில் வைட்டமின் A, C, E, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், முளைகட்டிய பீன்ஸில் உடலுக்குத் தேவையான புரோட்டீன், ஃபொலேட், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளன.
மாம்பழம் மற்றும் முளைகட்டிய பச்சைப் பயறும் சேரும்போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்புரிந்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றன. மேலும், உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து உஷ்ணத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
காலை உணவுடன் மாம்பழம், முளை கட்டிய பயறுடன் லெமன் ஜூஸ் சேர்ப்பது ஃபைட்டோ கெமிக்கல்ஸ், பாலிஃபினால்ஸ் மற்றும் வைட்டமின் C சத்துக்கள் கிடைக்கச் செய்கின்றன. மேலும், அந்த உணவுடன் கேரட், வெள்ளரி, வெங்காயம் மற்றும் லெட்டூஸ் போன்ற காய்கறிகளைச் சேர்த்து உண்ணும்போது தேவையான நார்ச்சத்தும் மேலும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
மாம்பழம் மற்றும் முளைகட்டிய பயறுகளை சேர்த்து உண்ணும்போது அவை குறைந்த கலோரி அளவும் அதிகமான நார்ச்சத்தும் கொண்டிருப்பதால் அதிக நேரம் வயிறு நிரம்பியுள்ள உணர்வு ஏற்படும். அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துப் பராமரிக்க முடியும். நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமானத்துக்கும், மெட்டபாலிசத்துக்கும் உதவி புரிகின்றன. வைட்டமின்களும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன; தொற்று நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடுகின்றன; நோய்களைக் குணமாக்கவும் உதவுகின்றன.
இதுபோன்ற ஊட்டச்சத்து மிக்க சாலட்களைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது நோயெதிர்ப்பு மண்டலம் மிகுந்த ஆரோக்கியம் பெறுகிறது. மாம்பழத்தின் இனிப்பு மற்றும் லேசான புளிப்புச் சுவையும் சாலட்டின் சுவையை அதிகப்படுத்துகிறது. முளைகட்டிய பயறுகளின் மொறு மொறுப்பும் காய்கறிகளின் ஃபிரஷ்னஷும் கோடைக்குத் தோதான ஓர் உணவை உட்கொண்ட மகிழ்வைத் தரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.