Healthy sugarcane juice https://e.vnexpress.net
ஆரோக்கியம்

இனிக்கும் கரும்பில் இத்தனை ஆரோக்கியமா?

ஆர்.ஜெயலட்சுமி

ரும்பை தவிர்த்து பொங்கல் பண்டிகை இல்லை எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கரும்பு சாப்பிட பிடிக்கும். இனிக்கும் கரும்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன.

கரும்பு சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது. குடல் புண், வெட்டை சூடு போன்றவற்றை குணப்படுத்துகிறது. வயிற்றுப் புண்களை ஆற்றும் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. கரும்பு சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து பருக வலிப்பு குணமாகும்.

ஒரு கப் கரும்பு சாருடன் சிறிதளவு வெல்லம், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். கரும்புச் சாறுடன் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வர பித்தம் குறையும்.

கரும்பு சாறு குடிப்பதால் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் எடை குறைய வழி வகுக்கிறது. அது மட்டுமல்ல, கரும்புச்சாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும் சிறந்த ஒன்றாகும்.

மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களைத் தவிர்த்து கரும்புச்சாற்றை சாப்பிட்டுப் பாருங்கள். அது நமக்கு புத்துயிர் அளித்து நமது மனநிலையை புதுப்பிக்கும் தன்மை கொண்டது.

கரும்புச்சாறு என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகும். அதேபோன்று, நமது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்து விடும். சிலருக்கு பற்கள் வலிமை இழந்து, பற்களின் ஈறுகள் மிகுந்த சேதம் அடைந்திருக்கும். இவர்கள் கரும்புச்சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்கள் வலிமை பெறுகிறது.

பொதுவாக, உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இதற்கு கரும்புச்சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது. உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும், கரும்புச்சாற்றால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் கிடைக்கிறது. வயிற்றுப் புண்களை சரி செய்து மலச்சிக்கலை போக்குகிறது.

நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்புச்சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கரும்புச்சாற்றில் உள்ள பொட்டாசியம் நமது வயிற்றின் சுரப்பிகளை சமன் செய்ய உதவுகிறது. கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான மண்டலம் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு கரும்புச் சாறு நல்ல தீர்வாக இருக்கும். கரும்பில் உள்ள பாலிஃபீனால் எனப்படும் இயற்கையான வேதிப்பொருள் இரத்தத் தட்டு அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

முக்கியமாக, மென்கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை உடலில் வளர்ச்சிதை மாற்றம் நடக்கும்பொழுது செயல்புரியும் நொதிகளின் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. எனவே, நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒரு முறை அளவாக கரும்பு சாறு அருந்த நல்ல பலன் கிடைக்கும். கரும்பை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் இதுபோல் கரும்பு சாறாக செய்து சாப்பிட்டு அதன் நல்ல மருத்துவ குணங்களை பெற்று பயனடையலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT