சளி, காய்ச்சலுக்கு ஆவி பிடித்தல் 
ஆரோக்கியம்

சளி, காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் பச்சிலை மூலிகை ஆவி!

இந்திராணி தங்கவேல்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல் நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் எந்தக் காரியத்திலும் வெற்றி அடைய முடியும். முன்பெல்லாம் சளி, காய்ச்சல் என்று சொன்னால் அது சாதாரண விஷயம். கொரோனா வந்த பிறகு அவற்றிற்கு தரப்படும் முக்கியத்துவமே வேற லெவல் என்றாகி விட்டது. ஆதலால் சளி, காய்ச்சலுக்கு ஆவி பிடித்து குணமாக்கும்  மூலிகைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

முதல் உதவி: எப்பேர்ப்பட்ட ஜலதோஷம் வந்தாலும் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு முக்கால் ஸ்பூன் பிங்க் நிறத்தில் இருக்கும் ராக் சால்டை போட்டு நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தி, ஐந்து சொட்டு எலுமிச்சையை பிழிந்து விடவும். இதை நன்றாகக் கலக்கி பிளாஸ்க்கில் வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது தண்ணீர் அருந்துவது போல் சிறிது சிறிதாக அருந்தி வர எந்த விதமான ஆன்டிபயாட்டிக்கும் தேவைப்படாமல், வேறு எந்தவித மருந்தும் தேவைப்படாமல் சளி கரைந்து வயிறு சுத்தமாகும் பொழுது வெளியேறிவிடும். இக்குடிநீரில் மஞ்சள் போடுவதால் தொண்டை வலி, புண் போன்றவற்றை குணப்படுத்தும். உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டிய அவசியம் கூட இதற்கு தேவையில்லை. அவ்வளவு நன்மை பயக்கக்கூடியது இந்தக் குடிநீர்.

* ஜலதோஷம் அதிகமாக உள்ளபோது முட்டைக்கோசை நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போடவும். கொதிக்கும்போது சூடாக மேலே வரும் ஆவியை ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்ளுக்கு இழுத்து மூச்சை விட ஜலதோஷம் விரைவில் நல்ல குணமாகும்.

* ஜலதோஷம் சட்டென்று நீங்க கருஞ்சீரகம், ஓமம், கற்பூரம் இவற்றைப் பொடித்து துணியில் கட்டி மூக்கினால் உறிஞ்ச வேண்டும்.

* ஜலதோஷத்தால் நீர் கோர்த்துக் கொண்டு உள்ளபோது கொதிக்கும் தண்ணீரில் கல் உப்பு போட்டு ஆவி பிடிக்க தலைக்கனம் குறையும்.

* ஜலதோஷம் பிடித்து இருக்கும்பொழுது துளசியிலையுடன் கற்பூரம் போட்டு தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு ஆவி பிடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகை இழுக்க ஜலதோஷம் குணம் பெறும்.

* ஜலதோஷம் பிடித்து மூக்கில் தண்ணீர் வடியும்போது சுக்கை சுட்டு முகர்ந்தால் புகை மூக்கின் உள்ளே போய் நீர் வடிவது குறையும்.

* ஜலதோஷம் பிடிப்பதால் உண்டாகும் நீர்கோர்வையை குறைக்க தேங்காய் மட்டை நார், சிறிது மஞ்சள் பொடி போட்டு புகையை சுவாசிக்க நீர்கோர்வை குணமாகும்.

* முகத்தில் உள்ள நீர் பிரச்னை நீங்க எலுமிச்சை விதைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதில் வரும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர் பிரச்னை தீரும்.

* ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஜலதோஷம் பிடிப்பது போல் இருந்தால் உடனே சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். சுடுதண்ணீர் ஜலதோஷத்தை குறைத்து விடும்.

* ஆடாதொடை இலைகளை நீரிலிட்டு நன்கு வேக வைத்து ஆவி பிடிக்க காய்ச்சல் குணமாகும்.

* உன்னிச்செடியிலை, கொய்யா இலை, ஆடாதொடை இலை, தைல இலை இவற்றை  நீரில் இட்டு காய்ச்சி ஆவி பிடிக்க தலை பாரம், தலைவலி மற்றும் காய்ச்சல் குணமாகும்.

* காட்டாமணக்கு இலைகளை நன்கு சிதைத்து நீரில் இட்டு காய்ச்சி ஆவி பிடிக்க காய்ச்சல் குணமாகும்.

* நாய் துளசி இலை, நல்ல துளசி இலை, தைல இலை இந்த மூன்றையும் நீரிலிட்டுக் காய்ச்சி ஆவி பிடிக்க காய்ச்சல் குணமாகும்.

* குங்கிலியத்தை நெருப்பில் இட்டு புகை பிடிக்க குழந்தைகளுக்கு உண்டாகும் நீர் கோர்வை குணமாகும்.

* வேலிப்பருத்தி இலைகளை நீரிலிட்டு நன்கு வேக வைத்து ஆவி பிடிப்பதால் தலைவலி குணமாகும்.

* நொச்சி இலை, விராலி இலை, தும்பை இலை, காட்டு எலுமிச்சை இலை இவற்றை தனித்தனியாக அல்லது கூட்டாக சேர்த்து வெந்நீரில் கொதிக்க விட்டு ஆவி பிடிக்க தலைவலி குணமாகும்.

அவரவர் வீட்டிற்கு அருகில் இதிலிருந்து  எந்தப் பச்சிலை கிடைக்கிறதோ அதைக் கொண்டு ஆவி பிடித்துப் பயன் பெறலாம்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT