Chamomile tea for persistent sneezing 
ஆரோக்கியம்

தொடர் தும்மல் அவஸ்தையைப் போக்க உதவும் மூலிகை டீ!

ஜெயகாந்தி மகாதேவன்

காலநிலை மாறும்போது தொற்று நோய்க் கிருமிகள் மூலம் மூச்சுப் பாதையில் உண்டாகும் வீக்கம், சளி மற்றும் தூசு, மகரந்தத் துகள்கள் எரிச்சலையும் அலர்ஜியையும் உண்டாக்கும். இவற்றோடு, சிகரெட் புகையின் விரும்பத்தகாத வாசனை போன்றவையும் தும்மல் வருவதற்கான முக்கியக் காரணங்களாகும். இதுபோன்ற நேரங்களில் நம் மூக்கின் உள்ளிருக்கும் உணர்வறியும் நியூரான்கள் சரிவர இயங்க முடியாத சூழ்நிலை உருவாகும். அப்போது அடுக்கடுக்காக தும்மல்கள் வருவது இயல்பு. ஒன்றிரண்டு தும்மலை சமாளிக்கலாம். அதுவே தொடர்ந்து வரும்போது எரிச்சலும் அசௌகரியமும் உண்டாகும்.

தும்மல் என்பது திடீரென நம்மை அறியாமல் காற்று மூக்கு மற்றும் வாய் வழியாக அதிவேகமாக வெளியேறும் செயலையே தும்மல் என்கிறோம். அப்போது நம் நெஞ்சை சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் வேகமாக சுருங்கி விரிவதுண்டு. இது நம் உடலில் இயற்கையாக அமைந்துள்ள தற்காப்பு வழியாகும். இதன் மூலம் மூச்சுப் பாதையில் படிந்திருக்கும் சளி, தூசு போன்ற அசுத்தங்கள் வெளியேற்றப்படும்; அங்கு உண்டாகும் எரிச்சலும் நீங்கும். இவ்வாறான அசுத்தங்கள் மூச்சுப் பாதைக்குள் சென்றவுடன் நரம்பு மண்டலம் மூளைக்கு சிக்னல் அனுப்பும். மூளை தாமதமின்றி உடனே அடிவயிறு மற்றும் நெஞ்சின் தசைகள் சுருங்குவதில் ஆரம்பித்து மாசுகள் அனைத்தும் வெளியேற்றப்படுவது வரையிலான தொடர் செயல்களுக்கு ஆணையிடும். இந்த செயல்களே தும்மல் உருவாவதற்கான காரணிகளாகும்.

சிலர் இதற்கு மருத்துவ உதவியை நாடுவர். இன்னும் சிலர் வீட்டிலேயே எளிய பொருட்களின் உதவியால் இதை குணமாக்க முயல்வர். பல காலமாக, கெமோமைல் (Chamomile) மூலிகை பல வகை நோய்களைக் குணப்படுத்தும் பாரம்பரிய  மருத்துவத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிகளின் கூற்றுப்படி, சமீப காலமாக தும்மலை நிறுத்தவும் கெமோமைல் டீ பயன்படுத்தப்படுகிறது.

கெமோமைல் டீ, இந்தத் தாவரத்தின் பூக்களை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. கெமோமைல் ஆன்டி கேன்சர், ஆன்டி இன்ஃபெக்ட்டிவ், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி த்ரோம்போடிக், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஹைபோலிபிடெமிக், ஹைபோக்ளைசெமிக், ஆன்டி ஹைப்பர்டென்சிவ், ஆன்டி டெப்ரெஸ்ஸன்ட் மற்றும் ந்யூரோ புரொடெக்ட்டிவ் குணங்களைக் கொண்டது. கெமோமைலில் உள்ள இதமளிக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குணங்கள் சீரான செரிமானத்துக்கும் மாதவிடாய் காலத்துப் பிடிப்புகளை நீக்கவும் உதவுகின்றன.

இந்த டீ இதய ஆரோக்கியம் காக்கவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். கெமோமைல் டீ அருந்துவது தும்மலை நிறுத்த உதவும் ஓர் அருமையான வீட்டு வைத்தியமாகும். இதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் இதம் தரும் குணங்கள் அலர்ஜி மற்றும் சளியினால் வரும் தும்மலை நிறுத்தவும் எரிச்சல் நீங்கவும் உதவி புரியும். மேலும் இதிலுள்ள லேசான மயக்க உணர்வு தரும் குணமானது உடலை தளர்வுற்ற நிலைக்கு எடுத்து செல்லவும் ஸ்ட்ரெஸ் குறையவும் உதவும். இதனால் மூச்சுப் பாதை வீக்கம் குறையும்; தும்மல் வருவதற்கான அறிகுறிகள் நீங்கும்.

கெமோமைல் பூக்களை உலர வைத்து பவுடராக்கி தயார் நிலையில் விற்கப்படும் பாக்கெட் அல்லது ஃபிரஷ் பூக்களை உபயோகித்து நீங்களும் இந்த டீ தயாரித்து அருந்தலாம்; தும்மல் மற்றும் மற்ற அசௌகரியங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

திருமண பந்தத்தின் உன்னதம் உணர்த்திய புகழ் பெற்ற சினிமா இயக்குநர் மனைவி!

2030ல் இந்தியாவே மாறப்போகுது… டேட்டா பயன்பாடு பன்மடங்கு உயரும்! 

ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான 5G உணவுகள்!

உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் இவ்வளவு நன்மைகளா? 

கடின சூழல்களை கடந்து வெற்றி பெற்ற தமிழ் சினிமாவின் கனவு நாயகன்!

SCROLL FOR NEXT