நம் உடலில் திடீரென தோன்றும் மருக்கள், நம் அழகைக் கெடுப்பது மட்டுமின்றி, நம்மை அதிகமாக கவலை கொள்ளவும் வைக்கும். இந்த மருக்கள் எதனால் உருவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் உண்மையைத் தெரிந்துகொள்வதன் மூலம், மருக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மருக்கள் என்பது ஹியூமன் பாபிலோமா வைரஸ் (HPV) எனப்படும் ஒருவகை வைரஸால் ஏற்படும் தோல் வளர்ச்சியாகும். இந்த வைரஸ் தோலில் உள்ள சிறிய காயங்கள் மூலம் உடலில் நுழைந்து, தோல் செல்களை அதிவேகமாக வளரச் செய்கிறது. இதன் விளைவாக தோலின் மேற்பரப்பில் கடினமான, கரடுமுரடான வளர்ச்சிகள் தோன்றும். HPV வைரஸ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் சில வகை மட்டுமே மருக்களை உருவாக்கும்.
மருக்கள் சரும தொடர்பு மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு பரவுகின்றன. இவை தொடுதல், பாலியல் தொடர்பு மூலமாகவும் பரவலாம். சிலர் மற்றவர்களை விட இந்த வைரஸ் தோற்றுக்கு அதிகமாக பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கலாம். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய் போன்ற பாதிப்பு இருப்பவர்கள் ஏற்கனவே மரு வந்திருக்கும் நபர்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். சருமத்தில் ஏற்படும் சிறிய காயங்கள், வெட்டுகள், சிராய்ப்புகள் மூலமாகக்கூட இந்த வைரஸ் உள்ளே நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இந்த வகையான மருக்களை அவற்றின் கடினமான தன்மை, சொரசொரப்பன, கரடுமுரடான வளர்ச்சி ஆகியவற்றை வைத்து கண்டறிய முடியும். அவை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். சில மருக்கள் வலி அல்லது அரிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான மருக்கள் எவ்விதமான பிரச்சனையும் கொடுக்காது அல்லது புற்றுநோய்க்கு வழி வகுக்காது. இருப்பினும் சில வகை HPV வைரஸ்கள் பெண்களில் கருப்பை வாய் புற்றுநோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
மருக்களை குணப்படுத்த சிகிச்சை அவசியமில்லை. ஒருவேளை அவை உங்களது அழகை கெடுப்பது போல உணர்ந்தாலோ, அதிக வலி மற்றும் அரிப்பு ஏற்படுத்தினாலோ, சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள மருவின் வகையை பொறுத்து, மருந்துகள், ஃப்ரோசன் சிகிச்சை, லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலமாக அது அகற்றப்படும். முன்கூட்டியே இந்த பாதிப்பு உங்களுக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு HPV வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கியம்.