Heart problem 
ஆரோக்கியம்

ஆர்டீரியோஸ்ளிரோசிஸ் (Arteriosclerosis) பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவுதான்... அதோகதி!

கல்கி டெஸ்க்

- மரிய சாரா

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும், மருத்துவ துறையின் வளர்ச்சியும் அசுர வேகத்தில் வளர்ந்து வந்தாலும் மனிதனுக்கு உண்டாகக்கூடிய நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. குறிப்பாக, இதயம் சம்மந்தமான நோய்கள் இன்று புதுப்புது பெயர்களுடன் பெருகிக்கொண்டுள்ளன. முன்பெல்லாம் எங்கோ யாரோ ஒருவர் இதய நோயால் இறப்பது என்ற நிலை மாறி தற்போது அனுதினமும் மாரடைப்பால் மரணம் என்னும் செய்திகளை நாம் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்.

இருதய நோய் நமக்கு ஏற்படுவதற்கான சில காரணங்கள்:

மன அழுத்தம்:

அதிக அளவில் இன்றைக்கு நமது இளம் தலைமுறையினரிடையேகூட திடீரென ஏற்படும் மாரடைப்பு மரணங்களுக்கு முக்கியக் காரணம்கூட தொடர் மன அழுத்தம்தான் கூறப்படுகின்றது. வேலைப்பளு, குடும்பப் பாரம், சரியான ஓய்வில்லாத வேலை நேரம் என பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. முறையாக, ஆரம்பத்திலேயே நல்ல மன நல ஆலோசனை பெற்று சரிசெய்யாவிட்டால் இந்த மன அழுத்தம் இருதயத்தை பாதித்து இருதயம் செயலிழக்க காரணமாக அமைந்துவிடும்.

தவறான உணவு முறைகள்:

தேசிய உணவு ஆராய்ச்சி நிறுவனம் 2021ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் துரித உணவுகள் (Fast Food) பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Junk Food) ஆகியவற்றின் பயன்பாடு 50 சதவீதம் அதிகரித்துள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் மற்றொரு கவலைக்குரிய தகவல் என்னவென்றால், ஜங்க் ஃபுட் (Junk Food) அதிகம் உண்பவர்களில் 40 சதவீதம் பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான். ஆரோக்கியமற்ற உணவுமுறை இருதயம் தொடர்பான பல வியாதிகளுக்கு முக்கிய காரணியாக அமைகிறது என்பது மிகவும் வேதனையான ஒன்றுதான்.

உடற்பயிற்சியின்மை:

உடலை வருத்தி உழைப்பதன் மூலம் அதை உறுதியாக வைத்துக்கொண்ட காலம்போய் இன்று, அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்களை வைத்துவிட்டு மனிதன் தனது உடல் எனும் இயந்திரத்தைப் பயன்படுத்த தவறிவிட்டான். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளையும் செய்யாமல் இன்று பலர் இருப்பதால், உடலின் தசைகள், இதயம் முதலிய முக்கியப் பாகங்கள் அதிகப்படியான சுமையைத் தங்குவதால் இருதய கோளாறுகள் அதிகம் நேரிடுகின்றன.

புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்:

இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது அனைத்து வயதினருக்கும் தற்போது ஒரு ஸ்டைல் ஆகவே மாறிவிட்டன புகைப்பிடிப்பதும் மது அருந்துவதும். இவை இரண்டுமே உடலுக்குத் தீங்கை விளைவிப்பதோடு உயிருக்கே ஆபத்தாக அமையும். சுவாசக் கோளாறுகளையும், இருதயக் கோளாறுகளையும் ஏற்படுத்தி இள வயது மரணங்கள் நிகழ முக்கியக் காரணிகளாக அமைகின்றன.

இருதய நோய்களின் முக்கிய வகைகள்:

கோரனரி ஆர்டரி நோய்: இருதயத்திற்கு ரத்தம் செல்லும் வழியில் ஏற்படும் அடைப்பின் காரணமாக இந்த வகை இருதய நோய் ஏற்படுகின்றது. அப்படி நேரும்போது உயிரை கூட இழக்க நேரிடலாம்.

மாரடைப்பு: மாரடைப்பு என்பது இருதயத்திற்கு ரத்தம் செல்லாமல் போகும்போது ஏற்படும் அபாய நிலை. இது எதிர்பாராத நேரத்தில் திடீரென உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்

ஆர்டீரியோஸ்ளிரோசிஸ் (Arteriosclerosis): ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு (தமனிகள்) கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் தடிமனாகவும் கடினமாகவும் மாறும்போது ஆர்டீரியோஸ்ளிரோசிஸ் ஏற்படுகிறது. இதனால் உடலின் பாகங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சீராகச் செல்ல இயலாமல் போவதால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இருதயத்தை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?

சீரான உறக்கம், உடலுக்கு தேவையான உடல் பயிற்சி, ஊட்டச்சத்துள்ள உணவுகள் சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள், புகை பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல் என இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இருதயக் கோளாறுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT