ஸ்பைருலினா என்பது நன்னீர் நீலப் பச்சை பாசி. இது ஸ்பைரல் வடிவில் இருப்பதால் ஸ்பைருலினா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 3000 சதுர அடி கொண்ட குளம், குட்டைகளில் இதை வளர்க்கலாம். இதில் புரதங்கள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் எல்லாம் அடங்கியுள்ளன. மற்ற இயற்கையான பொருட்களில் உள்ள புரதத்திற்கும், ஸ்பைருலினாவில் உள்ள புரதத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது.
உலக அளவில் இதற்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைய நடைபெற்று இருக்கின்றன. ஹைதராபாத்தில் உள்ள உணவு சத்துப் பொருள் ஆராய்ச்சிக் கழகம், இதில் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு இருக்கிறது. இதைப்போலவே மைசூரில் உள்ள சிஎஃப்டிஆர்ஐ நிறுவனமும் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த மருந்தை அங்கீகரித்துள்ளது.
இந்தியாவிலும் பல மருத்துவர்கள் இதை உணவுப் பற்றாக்குறை மாற்றாக எழுதித் தருகிறார்கள். இந்த உணவு மருந்து விண்வெளி வீரர்களுக்குத் தரப்படுவதைப் போல ஒலிம்பிக் வீரர்களுக்கும் தரப்படுகிறது. இந்த ஸ்பைருலினாவில் 100 கிராமில் 63 கிராம் புரதச்சத்து, எளிதாக செரிமானமாகி இரத்தத்தில் சேரத்தக்கதாக உள்ளது. மற்ற புரதங்களில் உடலுக்குள் சென்ற பிறகுதான் அமினோ அமிலங்களாக அவை பிரிகின்றன. ஆனால் ஸ்பைருலினா என்கிற இந்த நன்னீர் பாசியில் உள்ள புரதத்தில் அமினோ அமிலங்களாகவே இயற்கையான நிலையில் இருக்கின்றன.
இந்தப் புரதம் குடலில் சென்று செரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இது செரிமான நிலையில் உள்ளது. ஸ்பைருலினாவில் புரதம் இருக்கிறதே தவிர, இந்த உயர் வகை புரதத்தால் காற்று தொந்தரவு உருவாவதற்கு வாய்ப்பு இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய், வாத நோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களில் அந்த நோயின் கடுமைத் தன்மையை குறைப்பதில் ஸ்பைருலினா பெரும்பங்கு வகிக்கிறது.
அடிப்படையில் மற்றவர்களுக்கு ஆதாரமானதும் அவசியமானதுமான பிராண காற்றே புற்றுநோய்க்காரர்களுக்கு பகையாகி விடுகிறது. எப்படி என்றால் இது புற்றுநோய் செல்களில் அதன் தன்மை மாறுபட்டு வீரியமடைந்து செல்கள் வேகமாக வளர்வதற்கு காரணமாகி விடுகின்றன. இந்த நேரத்தில் ஸ்பைருலினா இப்படிப்பட்ட குணம் மாறிய ஆக்சிஜனை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் புற்றுநோய் செல்களின் தீவிரமான வளர்ச்சி குறையத் தொடங்கும். என்றாலும் இந்த மருந்து மெதுவாகத்தான் வேலை செய்யும். குறைந்தபட்சம் 120 நாட்கள் இந்த நன்னீர்ப் பாசி சாப்பிட்டாக வேண்டும். ஏனெனில் ஒரு முறை உண்டான இரத்த சிவப்பணுக்கள் 120 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. நமக்கு நோய்களும் ஒரே நாளில் தோன்றுவதில்லையே. ஆதலால் மெல்ல மெல்லதான் இது வேலை செய்யும்.
ஸ்பைருலினா கரியமில வாய்வை வெளியேற்றி உடம்பின் ஆரோக்கியத் தன்மையை காப்பாற்றுவதில் ஒரு நகரத்தில் ஒரு நகர சுத்தி தொழிலாளி செய்கிற வேலையை திறம்பட செய்கிறது. சுற்றுப்புற சூழல் பாதிப்பாலும், சீரற்ற உணவு முறையாலும், இரசாயனம் கலந்த நவீன உணவு வகைகள், அடிக்கப்படுகிற பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், செயற்கை உரங்களாலும் ஒரு நச்சு மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதனை மீட்பதற்காக இறைவன் அருளி இருக்கிற அற்புத மூலிகைதான் ஸ்பைருலினா என்கிற நன்னீர்ப் பாசி. இதனைப் பொடியாக்கி பானங்களில் சேர்த்து பருகலாம். உணவு பண்டங்களில் எதெதில் சேர்க்க முடியுமோ அத்தனையிலும் சேர்த்து பயன்பெறலாம்.