சிறு வயதில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் பற்றி நாம் அறிவோம். ஆனால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நோய்த் தொற்றுக்கள் ஏற்படும் முதுமையில் போடப்படும் தடுப்பூசிகளின் அவசியத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது நிமோனியா பிரச்னையால்தான். நிமோனியா என்பது ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது பெரியவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. இந்தக் கிருமி நுரையீரலைத் தாக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, காய்ச்சல் போன்ற உபாதைகளைத் தந்து சமயத்தில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க தடுப்பூசிகள் உள்ளன.
இந்தத் தடுப்பூசியில் கிருமியின் செல்லிலிருந்து புரதத்தை எடுத்து அது செயல்படாத நிலையில் நம் உடலினுள் செலுத்தப்படும். இதனால் நம் உடல் அந்தக் கிருமிக்கு எதிராக செயல்படும். எதிர்காலத்தில் இந்தக் கிருமி தொற்று வந்தாலும் அவர்களுக்கு ஒன்றும் நேராது.
ஐம்பது வயதைக் கடந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஒரு டோஸ் போட்டுக்கொண்டால் போதும். அடுத்ததாக ஃப்ளூ காய்ச்சலுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்தக் கிருமி செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் அதிகமாகப் பரவும். இதைத் தடுக்க ஆகஸ்ட் மாதத்திலேயே தடுப்பூசி போடுதல் அவசியம். ஒரு மாதத்திற்கு பிறகுதான் இந்தக் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி மேம்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
‘சோரிசெல்லா சோஸ்டர்’ என்ற வைரஸ் கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. முதியவர்களுக்கு இந்த அம்மை தாக்கும்போது காயம் ஏற்பட்ட இடத்தில் கடுமையான வலி இருக்கும். அறுபது வயதைக் கடந்தவர்கள் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது.
இது தவிர, டெட்டனஸ், ஹெபடைட்டிஸ் பி போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளும் உள்ளன. முதியவர்கள் தங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிகளை முன்பே போட்டுக் கொள்வதால் உடல்நலக்குறைவு, மருத்துவமனையில் அட்மிட் ஆவது, பணச் செலவு அனைத்தும் தடுக்கப்படும். உயிரைக் காக்கும் தடுப்பூசியின் அவசியத்தைப் புரிந்து கொண்டு உடல் நலன் பேணுவோம்.