ஆரோக்கியம்

இந்தியாவில் இருமல், காய்ச்சலின் பின்னணியில் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்: ICMR அறிக்கை!

கார்த்திகா வாசுதேவன்

நாடு முழுவதும் இருமல், சளி மற்றும் குமட்டல் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், கண்மூடித்தனமாக மக்கள் ஆண்ட்டி பயோடிக்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவுரை கூறி எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தொடர்ந்து பரவி வரும் இருமல், சில சமயங்களில் காய்ச்சலுடன் இணைந்து வதைப்பதற்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ துணை வகை வைரஸான H3N2 யே காரணமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக பரவலான தாக்கத்தில் உள்ள H3N2 வைரஸ் தொற்று, மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிக காட்டமானதாகக் கருதப்படுகிறது. இதன் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை வரை செல்வதே இதன் தீவிரத்தை உணரப் போதுமானதாக இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, நாடு முழுவதும் இருமல், சளி மற்றும் குமட்டல் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்கள் கண்மூடித்தனமாக (Anti Biotic) நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தனது எச்சரிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது.

வைரஸ் தொற்றினால் பரவக்கூடிய இந்தப் பருவகால காய்ச்சல் ஐந்து முதல் ஏழு நாட்கள் நீடிக்கும். காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும் ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் என்று IMA இன் நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான நிலைக்குழு தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாடு காரணமாக வைரஸ் தொற்று பரவல்கள் அதிகரித்துள்ளன, இது பெரும்பாலும் 15 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது மற்றும் காய்ச்சலுடன் மேலும் பல சுவாசம் தொடர்பான நோய்த்தொற்றுகளையும் இது ஏற்படுத்துகிறது என்று IMA கூறியது.

IMA அறிவுறுத்தலின் படி இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவர்கள் அறிகுறி சிகிச்சையை மட்டுமே பரிந்துரைத்தால் போதும்

நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கத் தேவையில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

ஆனால், பொதுவில் இங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அஸித்ரோமைசின், அமோக்ஸிக்லாவ் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் என்னவெல்லாம் பின்விளைவுகள் நிகழும் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சர்வ சாதாரணமாக அவற்றை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். கடைசியில் இவற்றின் அளவு உடலில் கூடும் போது இவற்றின் பின் விளைவுகளோடு சேர்த்து வைரஸ் தொற்றை எதிர்த்துச் செயல்படும் ஆற்றலையும் கூட இந்த மருந்துகள் இழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. - என்கிறது IMA.

அமோக்ஸிசிலின், நோர்ஃப்ளோக்சசின், ஓப்ரோஃப்ளோக்சசின், ஆஃப்லோக்சசின் மற்றும் லெவோஃப்ளோக்சசின் ஆகியவை மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள். வயிற்றுப்போக்கு மற்றும் யுடிஐ சிகிச்சைக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன, என்கிறது IMA.

"கோவிட் காலத்தில் அசித்ரோமைசின் மற்றும் ஐவர்மெக்டின் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், நிச்சயம் இதுவும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தடை செய்யப்பட வேண்டிய வழிமுறையே என்கிறது IMA.

அத்துடன் மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கும் முன் அந்தத் தொற்று பாக்டீரியாவால் தானா? அல்லது வேறு ஏதேனும் முறையிலான தொற்றா இல்லையா என்பதை மருத்துவர்கள் கண்டறிவது அவசியம்," என்றும் IMA கூறியுள்ளது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT