சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயிலின் விலை குறைவாக இருப்பதால் உலகெங்கிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பல உணவுப் பொருட்களை குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே பாமாயில் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா? இதன் உண்மையை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பாமாயிலின் நன்மைகள்:
பாமாயில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பாமாயில் உயிர் வெப்ப நிலையில் சமைப்பதற்கு ஏற்றது. ஏனெனில், இதன் புகைப்புள்ளி அதிகம். இது மற்ற தாவர எண்ணெய்களை விடவும் குறைந்த விலையில் கிடைப்பதால் பல உணவு உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது. பாமாயில் உணவுப்பொருட்களின் சுவை, மணம் மற்றும் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
பாமாயிலின் தீமைகள்:
பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், இதில் மற்ற தாவர எண்ணெய்களை விட அதிக அளவு ஆரோக்கியமற்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். பாமாயிலை உற்பத்தி செய்ய பெரிய அளவில் பனை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக பெரிய அளவில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
பாமாயிலில் சமைப்பதில் நன்மை தீமை என இரண்டும் உள்ளது. எந்த உணவையும் அதிக அளவில் உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. பாமாயிலையும் மிதமான அளவில் பயன்படுத்துவது நல்லது. ஆலிவ் எண்ணெய், ஆளி விதை எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை பாமாயிலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பாமாயில் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்ணுங்கள். இதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது.
பொதுவாகவே, நீங்கள் சாப்பிடும் உணவில் அதிகமாக எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது உங்கள் உடல் கொழுப்பை அதிகரிக்கும் என்பதால், பல்வேறு விதமான உடல் பாதிப்புகள் ஏற்படலாம். முடிந்தவரை அதிக எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.