காபி மற்றும் தேநீர் இரண்டும் பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பிடித்த பானங்கள். சிலர் டிபன் அல்லது உணவு உண்டு முடித்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்துவார்கள். கேரளா போன்ற பிரதேசங்களில் மக்கள் டிஃபனோடு சேர்த்து தேநீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது உடல் நலத்திற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சிலர் சூடாக தேநீர் அல்லது காபி அருந்துவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்புகிறார்கள். அதனால்தான் உணவு உண்டு முடித்த பின்னர் காபி அல்லது தேநீரை உடனே அருந்துகிறார்கள். ஆனால், இதில் உள்ள குறைபாடுகளை பற்றி அவர்கள் அறிவதில்லை.
பாதிப்புகள்:
ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் குறைபாடு: உண்ணும் உணவின் ஊட்டச்சத்து முழுவதும் உடலில் சேர போதுமான நேரம் தரப்பட வேண்டும். தேநீர் மற்றும் காபி இரண்டிலும் டானின்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற கலவைகள் உள்ளன. அவை இரண்டும் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுவதை தடுக்கின்றன. தாவர அடிப்படையிலான பருப்பு, பீன்ஸ், கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது. உணவு உண்ட சிறிது நேரத்தில் காபி அல்லது தேநீர் அருந்தும்போது இந்த கலவைகள் இரும்புடன் பிணைக்கப்படுகின்றன. இதனால் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு தடையாக இருக்கும்.
இரும்புச்சத்துக்கான தாவர அடிப்படையிலான ஆதாரங்களை நம்பி இருக்கும் நபர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல் நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். காபியில் உள்ள காஃபின் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதையும் தடுக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதிக அளவு காஃபின் உட்கொள்வது காலப்போக்கில் எலும்பு அடர்த்தியைக் குறைக்கும்.
செரிமான அசௌகரியம்: செரிமானத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி ஒருவிதமான அசௌகரியத்துக்கு வழிவகுக்கும். காபி வயிற்றில் அமில உற்பத்தியைத் தூண்டும். இதனால் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற நிலைமைகளுக்கு ஆளாகலாம். மேலும், காபி அல்லது டீ அருந்துவது உடலில் வீக்கம் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதுபோன்ற திரவங்கள் இரைப்பை சாறுகளை நீர்த்துப் போகச் செய்யும். செரிமானத்தில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.
இதயத் துடிப்பு மற்றும் நடுக்கம்: சிலருக்கு உணவிற்குப்பின் காபியை எடுத்துக் கொள்ளும்போது இதயத் துடிப்பு, நடுக்கம் அல்லது அமைதியின்மைக்கு வழிவகுக்கும். மேலும், இரவில் உணவு உட்கொண்ட பின்பு டீ அல்லது காபி அருந்தினால் தூக்க முறைகளை சீர்குலைத்து தூங்குவதை கடினமாக்கும்.
டையூரிடிக் விளைவு: காபி மற்றும் தேநீரில் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். அடிக்கடி கழிவறைக்குச் செல்லும் நிலையை உண்டாக்கும். மேலும், நாள் முழுவதும் திரவ உட்கொள்ளல் சமநிலையில் இல்லாவிட்டால் நீர் இழப்பும் ஏற்படலாம்.
மனநிலை மாற்றங்கள்: காஃபின், மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி கவலை நிலைகளை உண்டாக்கும். மன அழுத்தம், மனப்பதற்றம் போன்றவை ஏற்படும். எனவே, உணவு அல்லது டிபன் சாப்பிட்ட பின்பு அரைமணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துதான் டீ அல்லது காபி அருந்த வேண்டும். அதுவே ஆரோக்கியத்திற்கு ஏற்றது.