முட்டையை வேக வைக்காமல் பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும் என பலரும் நம்புகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், வயதுக்கு வந்த பெண்கள், தடகள வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், வெயிட் லிஃப்ட் பயிற்சி எடுப்பவர்கள் என பலரும் பச்சை முட்டை குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பர்.
பச்சை முட்டையின் வெள்ளைக் கருவில் அவிடின் எனும் புரதச் சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயோட்டின் என்னும் வைட்டமின் உடன் இணையும்போது, பயோட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படும். இதையே வேக வைக்கும்போது அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்து விடும். இதன் பலனாக முட்டையில் உள்ள பயோட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிட்டின் சத்தை விட. பயோட்டின்தான் உடலுக்குத் தேவை.
கூந்தல் வளர்ச்சிக்கும் இது துணை புரிகிறது. முட்டையில் சால்மோனல்லா போன்ற பாக்டீரியாக்கள் உள்ளன. முட்டையை வேக விடும் போது அவை அழிக்கப்பட்டு விடும். இதனால் பச்சை முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். ஹார்மோன் ஊசி போட்டு வளரும் கோழிகளினால் உண்டாகும் பாதிப்பு, இறைச்சியோடு முட்டையிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு நல்லதாகும்.