வாய் துர்நாற்றம் என்பது ஒரு தனிநபரை பெரிய அளவில் பாதிக்கும் விஷயமாகும். எனவே எல்லா சூழ்நிலைகளிலும் உங்கள் வாயை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம். குறிப்பாக யாரையாவது சந்திக்கப் போகிறீர்கள் என்றால், வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மோசமான வாய் துர்நாற்றத்தால், உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது ஒரு நபரை உளவியல் ரீதியாக விரும்பத்தகாத நபராக மாற்றிவிடும்.
நீங்கள் அடிக்கடி வெளியே சென்று பல நபர்களை சந்தித்து பேசுபவராக இருந்தால், வாய் சுகாதாரத்தை பராமரித்து எத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பதிவில் வாய் துர்நாற்றத்தை போக்க என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?
நீங்கள் வாய் துர்நாற்றத்தை போக்க முயற்சிப்பதற்கும் முன்பு அது எதனால் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சிலருக்கு வாய் துர்நாற்றம், வாயில் உள்ள பிரச்சனைகளால் மட்டுமின்றி சில அடிப்படை உடல்நலப் பிரச்சனைகளாலும் ஏற்படலாம். இத்தகைய துர்நாற்றம், உட்கொள்ளும் உணவு மற்றும் மருந்துகளினால் உருவாகிறது. இரவில் சாப்பிடும் உணவின் துகள்கள் வாயில் மாட்டிக் கொண்டு பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.
வாய் துர்நாற்றத்தை நீக்கும் வழிமுறைகள்:
தினசரி போதிய அளவு தண்ணீர் குடிப்பது மூலமாக வாய் வரட்சியை குறைத்து துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
வாயை ஆரோக்கியமாக வைத்திருங்கள். தினசரி முறையாக பல் துலக்கங்கள். இரவு தூங்குவதற்கு முன்பு பல் இடுக்குகளில் மாட்டியுள்ள உணவுத் துகள்களை நீக்குவது அவசியம்.
நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் சிட்ரஸ் உணவுகள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராட உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தயிர் சாப்பிடுங்கள். ஆம் தயிர் சாப்பிடுவது மூலமாக வாயில் ஹைட்ரஜன் சல்பைட் அளவு குறைகிறது. மேலும் தயிரில் விட்டமின் டி நிறைந்துள்ளதால் வாய் துர்நாற்றத்தைக் குறைக்கும் பண்பு உள்ளது.
வாய் துர்நாற்றத்தை போக்க கிரீன் டீ, இஞ்சி, கேரட், வாழைப்பழம், வெள்ளரி, பேரிக்காய் போன்ற உமிழ்நிரை உற்பத்தி செய்ய உதவும் பழங்களும், காய்கறிகளும் உதவுகின்றன.
நாக்கின் மேற்பரப்பில் வெள்ளையாக படியும் மாவு போன்ற அமைப்பில் உள்ள கிருமிகளால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே ஒரு டங் ஸ்க்ரப்பர் மூலம் அவற்றை திறம்பட அகற்றிவிடுங்கள். சுவிங்கம் பயன்படுத்தியும் வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம்.