கார்போகரிசி என்பது ஆயுர்வேத, சித்த சீன மருத்துவங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தாவரம் ஆகும். இது ஒரு செடி வகையைச் சேர்ந்தது. 3 அடி உயரம் வரை வளரும். இது ஊட்டச்சத்துள்ள மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும். ஒரு கிளையில் 8 முதல் 12 பூக்கள் பூக்கும். இவற்றின் விதைகளே அதிக பலன்களைத் தருகின்றன. இலை, பழம், விதை, வேர் யாவும் மருத்துவ பயன் உடையவை. கார்போகரிசிக்கு குஷ்டநாசினி, சோமவள்ளி என்ற பெயர்களும் உண்டு.
மருத்துவப் பயன்கள்: இதிலுள்ள முக்கிய வேதிப்பொருட்கள் செரோலின் மற்றும் ஐசோ செரோலின். கார்போகரிசியின் முக்கியமான பயன் லூகோடெர்மா, விட்டிலிகோ போன்ற சரும வியாதிகளை எதிர்ப்பது ஆகும். ஆதிகாலத்தில் சீனாவிலும், இந்தியாவிலும் இதன் எண்ணெயை உடல் வெளி பாகத்தில் தேய்த்து சரும வியாதிகளைப் போக்கினர். சரும நோய்களுக்கு அற்புதமான மருந்தாக இது பயன்பட்டது. மேலும், நம் உடலிலுள்ள உறுப்புகளை சுத்தப்படுத்துதல் உடலுக்கு புத்துணர்ச்சியூட்ட இதை உபயோகித்தார்கள். இதன் வேர் பல்வேறு வியாதிகளுக்குப் பயன்படும். இலை அமீபாவால் வரும் வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும் வல்லது. இதன் பழம் வாந்தி, மூலம், இரத்த சோகை, சுவாச சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். முடி வளரவும் பயன்படுத்தப்பட்டது. வயிற்று வலி, முதுகு வலி, சிறுநீரகக் கல் சம்பந்தப்பட்ட நோய்களையும், குணப்படுத்தும். இது தாது விருத்தி உண்டாக்கி உடல் வலிமை பெறப் பயன்படும்.
இந்த அரிசிப்பொடி புற்றுநோய், பூஞ்சை காளான்கள் போன்ற நுண் கிருமிகளை அழிக்கிறது. இந்தப் பொடி 2 கிராம் எடுத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் பூச்சிகள் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். இதன் விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து அதை இருதய சம்பந்தமான நோய்களுக்கும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தவும் இரத்த ஓட்ட சம்பந்தமான வியாதியை சீர் செய்யவும், சரும வியாதியை குணப்படுத்தவும் மற்றும் வெண் குஷ்டம், குஷ்டம், எய்ட்ஸ்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
நார்சத்து: கார்போகரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது ஜீரணத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. இதன் தானியச் சத்துக்கள் உடனடியாக சிதைக்கப்படாததால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. இது எடையை குறைக்கவும் உதவக் கூடியது. உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி டயபெடிஸ், இதய நோய் போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கக் கூடியது.
சந்தனாதி சூரணம்: கார்போகரிசி, நீரடிமுத்து, கஸ்தூரிமஞ்சள், கோரைகிழங்கு, சந்தனத்தூள், அகில் கட்டை, தேவதாரு, கற்பாசி, வெட்டி வேர், குருவி வேர் ஆக பத்து பொருட்களையும் சம பங்காக எடுத்து ஒன்றாக இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு, குளிக்கும்போது இந்த சூரணத்தை நீர் விட்டுக் குழைத்து உடல் முழுவதும் பூசி தேய்த்து 5 நிமிடம் வரை ஊற விட்டுப் பின் நன்றாகத் தேய்த்து குளித்து வந்தால் ஒரு மாதத்தில் சொறி சிரங்கு, நமைச்சல், படை, தவளைசொறி கருமேகம் யாவும் மறையும்.
பண்டைய காலத்தில் கார்போகரிசி ‘அலோபீசியா’ (வழுக்கையை குறிக்கிறது) சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. எனவே, கார்போகரிசி உடலுக்கு நீண்ட நாள் ஆரோக்கியத்தை பேணக்கூடிய ஒரு உணவாகக் கருதப்படுகிறது.