lectin rich foods 
ஆரோக்கியம்

யாரெல்லாம் லெக்டின் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

நாம் ஆரோக்கியமாக வாழ காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அவசியம். ஆனால், லெக்டின்கள் உள்ள உணவுகளை சிலர் மிகக்குறைவாக எடுக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

லெக்டின்கள் என்றால் என்ன?

லெக்டின்கள் பல தாவரங்கள் மற்றும் தானியங்களில் காணப்படும் இயற்கையான புரதங்கள் ஆகும். இவை குறிப்பாக விதைகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் காணப்படும். இவை பூச்சிகளிடமிருந்து  தாவரங்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், மனிதர்களால் உண்ணப்படும்போது அவை செல்களின் மேற்பரப்பில் சர்க்கரை மூலக்கூறுகளுடன் பிணைக்கப்படலாம் மற்றும் செல்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பாதிக்கலாம்.

பெரும்பாலான மக்களுக்கு லெக்டின்கள் கொண்ட உணவுகள் எந்த பிரச்னையும் செய்வதில்லை. ஆனால், சரியாக சமைக்கப்படாமல் அவற்றை சாப்பிடும்போது உடலில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதேசமயம் சிலர் லெக்டின்கள் கொண்ட உணவு வகைகளை மிகக் குறைவாகவோ அல்லது தவிர்க்கவோ வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும் மருத்துவர்களும் கூறுகிறார்கள்.

லெக்டின்கள் உள்ள உணவு வகைகள்: சிவப்பு கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கருப்பு பீன்ஸ், நேவி பீன்ஸ் ஆகியவற்றில் லெக்டின்கள் அதிகமாக இருக்கும்.

பச்சைப்பயிறு, சிவப்பு நிறமான பருப்புகள், பழுப்பு நிறமான பருப்பு வகைகளில் லெக்டின்கள் உள்ளன.

பச்சைவேர்க்கடலையிலும் கொண்டைக்கடலையிலும் உள்ளன. இவற்றை நன்கு சமைப்பதால் லெக்டின்களைக் குறைக்கலாம்.

தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சீமை சுரைக்காய், பூசணி போன்ற காய்கறிகளிலும், கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களிலும், வாழைப்பழங்கள், மாம்பழம், முலாம்பழம் போன்ற பழங்களிலும், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் போன்ற விதைகளிலும் லெக்டின்கள் உள்ளன.

யாரெல்லாம் தவிர்க்க அல்லது குறைவாக உட்கொள்ள வேண்டும்?

தன்னுடல் தாக்க நோய் உள்ளவர்கள்: முடக்குவாதம், அழற்சி குடல் நோய் போன்ற தன்னுடல் தாக்க நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் லெக்டின்கள் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து உடலில் வீக்கத்தையும் வேறு சில மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

செரிமானக் கோளாறு உள்ளவர்கள்: எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் செலியாக் நோய் உள்ளவர்கள் இவற்றை தவிர்க்க வேண்டும். இவை குடல் புறணியில் ஊடுருவி செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உணவு உணர்திறன் உள்ளவர்கள்: சில நபர்களுக்கு பீன்ஸ் தானியங்கள் மற்றும் நைட் ஷேடு காய்கறிகளான தக்காளி, கத்தரிக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாது. இவர்களுக்கு செரிமான அசௌகரியம், வீக்கம், வாயு மற்றும் ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்தும்.

பச்சையாக தானியங்கள், காய்கறிகள் மற்றும் பருப்புகளை உண்பவர்கள்: பச்சை வேர்க்கடலை சாப்பிடுபவர்கள், சரியாக வேகவைக்கப்படாத கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றை உண்பவர்களுக்கு குமட்டல். வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

லெக்டின்கள் இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் கொண்ட சில ஊட்டச்சத்துக்களுடன் பிணைக்கப்படும்போது உடல் இந்த தாதுக்களை உறிஞ்சுவதை கடினமாக்குகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

எனவே. லெக்டின்கள் நிறைந்த உணவு வகைகளை மேற்கண்ட நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் அவற்றை முறையாக சமைப்பது மிகவும் முக்கியம்.

சபரிமலையின் புண்ணிய வரலாறு!

முடிவுக்கு ஆசைப்படுவதை விட்டு செயலாற்றுவதில் ஆசைப்படுங்கள்!

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT