பழைய சாதத்தையும், கொத்தவரங்காய் வற்றலையும் சாப்பிட்டு அக்காலத்தில் விவசாயிகள் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், தற்போது பழைய உணவு முறைகளை கைவிட்டு, பாஸ்ட் புட் வழக்கத்துக்கு மாறி விட்டதால், தினமும் ஒரு நோயுடன் போராடுகிறார்கள்.
அதிக மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தவரங்காயில் ஏராளமான வைட்டமின்கள், தாது உப்புக்கள், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. மேலும், குறைந்த எரிசக்தி, அதிக நார்ச்சத்து, புரோட்டின், கார்போஹைட்ரேட் முதலியனவும் உள்ளன.
இதில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும். மெக்னீசிய சத்து எலும்புகளுக்கு வலுவூட்டும். எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி பிரச்னைகளுக்கு கொத்தவரை சாப்பிட குணமாகும். இதில் உள்ள கிளைகோ சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன.
சர்க்கரை அளவு குறையவில்லை என்பவர்கள் கொத்தவரங்காயை தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவு வேக வைத்து மூடி வைத்து விடவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை வடிகட்டி ஒரு வாரம் குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பட்டிருக்கும்.
கர்ப்பிணிகளுக்குத் தேவையான இரும்புச் சத்தும், சுண்ணாம்பு சத்தும் இதில் மிகுதியாக உள்ளன. குழந்தையின் வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிக்க துணையாக விளங்குகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் அதிக இரத்தம் சுரக்கும். இதில் காணப்படும் நார்ச்சத்து இரத்தத்தில் கெட்ட கொழுப்பு, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மாரடைப்பு, இதய நோய்களை வர விடாமல் தடுக்கிறது. மேலும், இதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் நல்ல செரிமானம் ஆவதோடு மலச்சிக்கல் பிரச்னையும் தீர்கிறது.
கொத்தவரங்காய் சாப்பிட, சருமத்தின் இறந்த செல்களை அழித்து, புதிய செல்களை உருவாக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. மேலும், கொத்தவரங்காயை சாப்பிடும்போது மூளை மற்றும் நரம்புகள் அமைதியாகி மன அமைதி கிடைக்கும். எனவே, இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளதால் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் தரும்.