காலிஃப்ளவர் https://www.thespruce.com
ஆரோக்கியம்

காலிஃப்ளவரில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிவோம்!

சேலம் சுபா

ந்தியாவில் கடந்த 150 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டுவரும் ஒரு காய்கறி காலிஃபிளவர் ஆகும். இது 1822ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்புகள் சொல்கின்றன. குளிர்காலத்தில் ஏராளமாக விளையும் தன்மை உள்ளதால் இது தமிழ்நாட்டின் ஊட்டி, கொடைக்கான‌ல் பகுதிகளிலும் வட இந்திய குளிர் பிரதேசங்களிலும் அதிக‌மாகப் ப‌யிரிட‌ப்ப‌டுகின்றன. தமிழிலும் இதன் பெயர் காலிஃப்ளவ‌ர்தான். பல்வேறு ஆரோக்கியச் சத்துக்களைக் கொண்ட காலிஃபிளவர் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

நடுத்தண்டைச் சுற்றி அடர்த்தியான வெள்ளை நிற குட்டி, குட்டி பூக்களுடன்  ஒரு பெரிய பூ போன்று அழகாக  வெண்மை நிறத்தில் இந்தக் காய்கறி இருக்கும். இந்த வெள்ளைப்பகுதியை ஒட்டி இருக்கும் நெருக்கமான பச்சை இலைப் பகுதிகள் சூரியனின் கதிர்கள் பட்டு பூக்கள் குளோரோஃபிலை உற்பத்தி செய்யாமல் தடுக்கின்றன. அதிக வெயில் பட்டால் பூவின் நிறம் மாறி, ஒருவித துர்மணம் வரும் என்பதால் பூவை விட்டு வெளியே நீண்டு வளரும் இலைகளை பூவின் தலைக்கு மேல் வைத்துக் கட்டுவதும் உண்டு.

ந‌ல்ல‌ காலிஃப்ள‌வ‌ர் பூவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. மஞ்சள் படியாத வெண்மை நிறத்தில் அதை ஒட்டியுள்ள இலை பசுமையாகவும் பூக்கள் கெட்டியாகவும் இருக்க வேண்டும். தண்டு நடுவிலோ, பூக்களுக்கு இடையிலோ பெரிய பச்சைப் புழு இருக்கும். கூர்ந்து நோக்கினால் புழு இருக்கும் இடத்தைச் சுற்றி கறுப்புப் புள்ளிகள் இருக்கும். அதைத் தடுக்க சமைப்பதற்கு முன்பு பூவை நறுக்கி உப்பு கலந்த கொதிக்கும் த‌ண்ணீரில்  போட்டு எடுத்தால் புழுக்கள் இறந்து வெளியே வந்துவிடும்.

காலிஃப்ள‌வ‌ரில் ஒருவித தாவர அமிலம் இருக்கிறது. இதுவே வேகும்போது கந்தகக் கலவையாக மாறி ஒருவித மணத்தைத் தரும். இதைத் தவிர்க்க சிறு துண்டு இஞ்சி தட்டிப் போட்டு வேக வைக்கலாம். இவற்றை வெகு நேரம் வேக வைப்பது தவறு. இதனால் இதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். இப்பூவை அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். காரணம், இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியம் மற்றும் இரும்புடன் கலந்து பூவின் வண்ணத்தை மாற்றும்.

இப்பூக்கள் தரையின் மேற்பரப்பில் விளைவதால் பூச்சிகள், கிருமிகள் நிச்சயம் இருக்கும். ஆகவே, சமைக்கும் முன்பு நன்கு சுத்தம் செய்து மேலே உள்ள இலைகளை நீக்கி,  சுடுநீரில் போட்டு பயன்படுத்துவதே நல்லது. பூ இருக்கும் அடித்தண்டையும் சேர்த்து சமைக்கலாம். இதன் மிக முக்கிய சத்தான ஃபோலாசின் சமைக்கும்போது வெளியேறிவிடும் என்பதால் அதை வேகவைத்த நீரை கீழே கொட்டாமல் சூப், ரசம், குழம்பு போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

காலிஃப்ளவரில் வைட்டமின் சத்துக்கள் மிக அதிகம். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவைப்படும் அளவைவிட 20 சதவிகிதம் அதிகம் உள்ளது என்றும் ஒரு கப் நறுக்கிய பூவில் 24 கலோரியுடன் புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், வைட்டமின் சி 72 மி.கிராம் , ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம்,பொட்டாசியம் 355 மி. கிராம் ஆகியவை நிறைந்துள்ளன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. காலிஃப்ள‌வ‌ருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பூ வேகும்போது வெளிவரும் Isothiocyan எனப்படும் ரசாயனம் உடல் தானாக உற்பத்தி செய்யும் புற்றுநோய் செல்களைத் தடுக்கும்.

இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால்  பக்கவாதம் மற்றும் பல இதய பாதிப்புகளைத் தடுப்பதோடு, மன அழுத்தத்தையும் குணமாக்குகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி மலச்சிக்கல் வராமல் காக்கிறது. இதில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காலிஃப்ள‌வரை வாரத்தில் மூன்று முறையாவது சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

‘எப்படி இருக்கீங்க?’ - ‘ஏதோ இருக்கிறேன்!’ எதுவும் இயங்கினால் மட்டுமே உயிர்ப்பு!

SCROLL FOR NEXT