மாம்பழங்களின் உச்சக்கட்ட சீசன் இது. இதன் சுவைக்கும் இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் இப்பழத்தை தினசரி உண்பவர் பலர். மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலைத் தூக்கி எறியாமல் அதில் டீ போட்டு அருந்தினால் பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க இந்த டீ உதவி புரியும் என்பது பலரும் அறியாதது. கொதிக்கும் நீரில் மாம்பழத் தோல்களை சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி கொஞ்சம் தேன் சேர்த்தால் டீ ரெடி. இந்த டீ அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
இந்த டீயில் பாலிபினால்ஸ், பிளவனாய்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், உடலில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கங்களைக் குறைக்கக்கூடிய வைட்டமின் C யும் அதிகம் நிறைந்துள்ளன. இவை 'ஹைப்போ க்ளைசெமிக்' தன்மைகளும் கொண்டவை.
இந்த டீயில் உள்ள மாங்கிஃபெரின் (Mangiferin) என்ற கூட்டுப்பொருளானது இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் இன்சுலின் மேலாண்மையை சிறப்பாகக் கையாளும் திறனும் கொண்டது. மேலும், இது குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயராமல் மெதுவாகவும் படிப்படியாகவும் உயர்ந்து செல்களுக்கு செல்லும்.
பெக்ட்டின் (Pectin) என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளிட்ட டயட்டரி நார்ச்சத்துக்கள் மாம்பழத் தோலில் அதிகம் உள்ளன. சாப்பிட்ட பின் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனே அதிகரிக்காமல் மெதுவாக கலப்பதற்கு நார்ச்சத்து மிகவும் உதவும். இதன் காரணமாக இந்த டீயை வடிகட்டிப் பிரித்தெடுக்காமல் டீக்குள் மிதக்கும் தோல்களை ஒரு இடிக்கியால் பிடித்து வெளியில் எடுப்பது கூடுதல் நன்மை தரும்.
அதிகளவு சர்க்கரை மற்றும் கலோரி அளவு கொண்டுள்ள மற்ற பானங்களைக் குடிக்கும்போது கிடைக்கும் நீர்ச்சத்தை விட மாம்பழத் தோல் டீ அருந்தும்போது நீரிழிவு நோயாளிகளின் உடல் அதிகளவு நீரேற்றம் பெறும்.
இந்த டீயை உணவின் ஒரு பகுதியாய் சேர்த்துக்கொள்ளும் முன் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.