Nerunjil is a medicinal herb
Nerunjil is a medicinal herb https://www.hindutamil.in
ஆரோக்கியம்

யானையையே தலைவணங்கச் செய்யும் நெருஞ்சில் மூலிகை!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

‘யானை நெருஞ்சி’ என்று அழைக்கப்படும் மருத்துவ மூலிகையில் சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உள்ளன. மணற்பாங்கான இடங்களில் தானே வளரக்கூடிய மூலிகை இது. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த நெருஞ்சில் இலையின் பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை.

சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும்  வளரக்கூடிய இது, சிறுநீர் பெருக்கும் தன்மை கொண்டதாகவும் மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்யும் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.

சிறு நெருஞ்சில்: மஞ்சள் நிற மலர்களை உடைய இந்தச் செடியின் பூக்கள் சூரியன் இருக்கும் திசை நோக்கி திரும்பும் தன்மை உடையவை. இந்தச் செடியின் காய் முற்றும்போது முள்ளுடன் இருக்கும். இது ஏராளமான நோய்களை குணப்படுத்தக் கூடியது. இதன் வேரை எலுமிச்சை பழச் சாறு விட்டு அரைத்து குடித்து வர, உரிய வயதில் பூப்பெய்தாத பெண்களுக்கு சிறந்த தீர்வாக அமையும். அதேபோல், இதன் இலைகளை எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு பாதியாக ஆனதும் வடிகட்டி அருந்தி வர பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் தயாரித்து, (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது) இதனை பாலுடன் கலந்து குடித்து வர உடல் பலம் பெறுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளும் தீரும்.

செப்பு நெருஞ்சில்: புல் தரையில் தரையோடு தரையாக படர்ந்து வளரும் கொடி வகை இது. இதன் பூக்கள் ரோஜா பூவின் நிறத்தில் இருக்கும். இதன் இலைகளை கசாயம் ஆக்கிக் குடித்து வர காய்ச்சல் குணமாகும். இந்தச் செடியின் வேர்களை கொதிக்க வைத்து குடித்து வர சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்களை வெளியே தள்ளும் தன்மை கொண்டது.

பெரு நெருஞ்சில்: இதை யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று சொல்வார்கள். மற்ற நெருஞ்சில்களை விட இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். இதன் இலைகளை தண்ணீரில் போட்டால் சிறிது நேரத்தில் தண்ணீர் கொழ கொழப்பு தன்மையுடன் எண்ணெய் போல் ஆகிவிடும். இந்தச் செடியை முழுவதுமாக பிடுங்கி அலசி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற விட்டு அதில் அழுக்கு கறை படிந்த பட்டு துணிகளை அலசினால் சுத்தமாகிவிடும்.

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் யானை நெருஞ்சில் சிறுநீர் கற்களை உடைக்கும் திறன் கொண்டது. நெருஞ்சில் பொடியை பாலில் கலந்து பருக, இரவில் நல்ல உறக்கம் வரும். நெருஞ்சில் குடிநீர் உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். யானையின் கொழுப்பு படிமம் நிறைந்த பாதங்களை துளைத்து யானையை தலை வணங்கச் செய்வதால் யானை வணங்கி என்ற பெயரும் இதற்கு உண்டு.

மணக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான் அருளும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பாய் சொல்லுங்கள்!

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் தெரியுமா?

மாணவர்களுக்கான சிறந்த 6 AI கருவிகள்!

Beehive Ginger: இது இஞ்சி இல்ல ஷாம்பூ… என்னடா சொல்றீங்க?

SCROLL FOR NEXT