பெற்றோர்களாகிய உங்களுக்கு, உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வகையில் சீரான மற்றும் சத்தான உணவை வழங்க வேண்டிய பொறுப்பு இருக்க வேண்டும். அத்துடன் எதுபோன்ற உணவுகளை அவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சில உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுத்து விடக்கூடாது. அத்தகைய உணவுகள் என்னென்ன என்று இப்பதிவில் பார்க்கலாம்.
கார்பனேட்டட் சர்க்கரை பானங்கள்: பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சோடா பழச்சாறுகள் மற்றும் பிற இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. இத்தகைய பானங்களை உட்கொள்வது குழந்தைகளின் எடை அதிகரிப்பு, உடற்பருமன் மற்றும் பல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: உங்கள் குழந்தைகளுக்கு சிப்ஸ், பிஸ்கட் மிட்டாய்கள் மற்றும் மிகவும் பதப்படுத்தப்பட்ட பிற உணவுகளை கொடுக்காதீர்கள். என்றும் ஆரோக்கியமான உணவையே அவர்களுக்குக் கொடுங்கள். குறிப்பாக ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அதிக உப்பு அடங்கிய உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிதளவில் பாதிக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள்: உங்கள் குழந்தைகளுக்கு அதிகம் பதப்படுத்தப்பட்ட, சீஸ், பன்னீர் மற்றும் பிற பால் பொருட்கள் போன்றவற்றை ஒருபோதும் அவர்களது உணவில் சேர்க்காதீர்கள். சில நேரங்களில் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் உணவு மூலமாக பரவும் நோய்களை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம்.
சமைக்காத இறைச்சி மற்றும் முட்டை: இவற்றில் சால்மனல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் பிற வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்.
காஃபின் கலந்த பானங்கள்: காபி, எனர்ஜி ட்ரிங்ஸ் மற்றும் சில டீ வகைகளில் காஃபின் அதிகமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு அதிக தூண்டுதலை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும் அபாயம் உள்ளது.
அதிகப்படியான உப்பு: குழந்தைகளுக்கு ஒருபோதும் அதிக உப்பு கலக்கப்பட்ட உணவுகளை கொடுக்கவே கூடாது. இது உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு பங்களித்து, சில மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதுதவிர, சிறிய அளவில் இருக்கும் திராட்சை, மிட்டாய்கள் போன்றவற்றை குழந்தைகள் வாயில் போட்டுக்கொண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டால் மூச்சு திணறல் ஏற்படும். எனவே அதை அவர்களின் வயதுக்கு ஏற்ப கொடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர்களின் உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்தி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு பெற்றோர்கள் பங்களிக்க முடியும்.