சமையலில் உணவுகளுக்கு சுவையூட்டவும் வாசனை தருவதற்குமாக நாம் வைத்திருக்கும் மசாலாப் பொருட்களில் சில நமது இதய ஆரோக்கியம் காக்கவும் வல்லவை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அவ்வாறான குணம் கொண்டு முன்னணியில் நிற்கும் ஒன்பது பொருள்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
* ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட குர்குமின் என்றொரு பொருளை அதிகம் உள்ளடக்கியது மஞ்சள். குர்குமின் இதயத்தில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து இரத்த நாளங்களின் செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது.
* இதய ஆரோக்கியத்தை இனிப்பாக்கக் கூடியது பட்டை! ஆம். சிறிது பட்டை (Cinnamon) பவுடரை உணவுகளில் சேர்த்து தயாரிப்பதால், உயர் இரத்த அழுத்தம், தேவையற்ற அதிகப்படியான கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிஸெரைட்கள் குறைந்து சமநிலைப்படுகின்றன; இதய நோய் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.
* வித்தியாசமானதோர் ஆழ்ந்த மணமும் காரத்தன்மையும் கொண்ட பூண்டினை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூப்பர் ஸ்டார் எனலாம். இதுவும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகப்படியான கொழுப்பை குறைத்து மொத்த இதய நாளங்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.
* இஞ்சியில் ஜின்ஜரால் எனப்படும் ஒரு வகை சக்தி வாய்ந்த கூட்டுப் பொருள் உள்ளது. இதை உணவில் சேர்த்து உண்ணும்போது உயர் இரத்த அழுத்தம் குறைகிறது; இதய நோய் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.
* கேயென்னே பெப்பர் (Cayenne pepper) எனப்படும் சிவப்பு மிளகாய் உணவுக்கு அதிக சுவை தரக் கூடியது. இதிலுள்ள கேப்ஸைஸின் என்ற பொருள் இரத்தத்திலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்க வல்லது; இதய ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறது.
* ஆர்கனோ (Oregano) என்பது கற்பூரவல்லி, ஓமம் போன்ற மூலிகை வகைச் செடி போன்றது. இதன் இலைகளை சாலட் போன்ற உணவுகளின் மீது தூவி உண்பது, உணவுக்கு சுவை கூட்டும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியம் காக்கும்.
* ரோஸ்மேரி என்ற மூலிகை உணவுக்கு மணமும் சுவையும் கூட்டுவதோடு, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது.
* ஏலக்காய் நாம் குடிக்கும் டீக்கு மணம் சேர்ப்பதுடன் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மொத்த இதய இரத்த நாளங்களின் செயல்பாட்டை சீராக்குகிறது.
* பசில் (Basil) என்ற மூலிகை இலைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கங்களைக் குறையச் செய்து இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.
இவ்வாறான மசாலாப் பொருட்களின் மகத்துவம் அறிந்து அவற்றை தவறாமல் உணவுடன் சேர்த்து உட்கொண்டு இதய நலம் காப்போம்.