நமது உடல் முழு ஆரோக்கியத்துடன் செயல்பட உதவும் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இது உடலுக்குள் சேரும் நச்சுக்களையும் தேவைக்கதிகமான தாதுக்களையும் பிரித்தெடுத்து வெளியேற்றும் பணியை சிறப்பாகச் செய்து வருகிறது. சிறு நீரகங்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நாம் பின்பற்ற வேண்டிய ஒன்பது ஆலோசனைகளை இப்பதிவில் பார்ப்போம்.
நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகம் கடினமாக வேலை செய்து அதிகப்படியான சர்க்கரையை பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது. சிறுநீரகம் பழுதடையாமலிருக்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகம் பழுதடைய மற்றொரு காரணியாகிறது. அதோடு கூட சர்க்கரை வியாதியும் கொலஸ்ட்ராலும் சேர்ந்தால் இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு வரும் வாய்ப்பு கூடுகிறது. எனவே, இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துப் பராமரிப்பது அவசியம். அதிக எடை மற்றும் ஒபிசிட்டியும் சிறுநீரக ஆரோக்கியம் கெட்டு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. எனவே, உடல் எடையை கட்டுக்குள் வைப்பதும் அவசியம்.
பதப்படுத்திய இறைச்சி மற்றும் அதிகளவு சோடியம் கொண்ட உணவுகளைத் தவிர்த்து, சரிவிகித உணவு உண்பது கிட்னியைப் பாதுகாக்கும். காலிஃபிளவர், ப்ளுபெரி, மீன், முழு தானியங்களால் சமைத்த உணவு போன்றவற்றை உண்பதால் கிட்னி ஆரோக்கியம் பெறும்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். தண்ணீர் நச்சுக்களையும் அதிகப்படியான உப்புக்களையும் பிரித்தெடுக்க கிட்னிக்கு உதவி புரிந்து, நாள்பட்ட வியாதி வருவதையும் தடுக்கிறது.
புகை பிடித்தல் இரத்த நாளங்களை சேதப்படுத்தி, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சரிவர நடைபெறுவதை கெடுக்கிறது. இதனால் கிட்னி நோயும், கேன்சரும் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகையை தவிர்த்தல் நலம் பயக்கும்.
தலைவலி, சளி போன்ற சாதாரண நோய்கள் வரும்போது டாக்டரை கலந்தாலோசிக்காமல் சுயமாக பார்மசிக்கு சென்று வலி நீக்கி (pain killer) மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பது கிட்னி பாதிப்பை உண்டாக்கும். நப்ரொக்சென் (Naproxen), இபுப்ரொஃபென் (Ibuprofen) போன்ற ஆன்டி இன்ஃபிளமேட்ரி மற்றும் ஆன்டிஸ்டெராய்டல் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போதும் கிட்னி பாதிப்படைய வாய்ப்பாகிறது.
தேவையான தொடர் உடற்பயிற்சி மூலம் இரத்த அழுத்தம் சீராகும். இதய ஆரோக்கியம் மேம்படும். கிட்னி பாதிப்படைவதும் தடுக்கப்படும்.
நீங்கள் அறுபது வயதைத் தாண்டியவராகவும், உங்களின் முந்திய பரம்பரையினருக்கு உயர் இரத்த அழுத்தம், ஒபிசிடி போன்ற குறைபாடுகள் இருந்திருந்தாலும், உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ள டாக்டரை கலந்தாலோசித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றி சிறுநீரக ஆரோக்கியம் பெற்று சிறப்பாக வாழ்வோம்!