obesity https://www.woodstockfamilypractice.com
ஆரோக்கியம்

என்ன செய்தாலும் உடல் பருமன் குறையவில்லையா? அப்படியென்றால் இதை செய்து பாருங்களேன்!

ஜெயகாந்தி மகாதேவன்

டல் பருமனைக் குறைப்பதென்பது பலருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. எடை அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியல் முறையில் சில மாற்றங்களைக் கடைபிடித்து வந்தாலே நல்ல முன்னேற்றம் காணலாம். அதற்கான சில வழிமுறைகளை இந்தப் பதிவில் காணலாம்.

தாகம் தணிக்க, செயற்கை இனிப்பூட்டி சேர்த்த ஆரோக்கியமற்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்த்து, தினசரி ஆறு கப் வரை தண்ணீர் குடிப்பது கலோரி அளவை அதிகரிக்காமல் எடையைக்  குறைக்க உதவும்.

குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள்ளாமல், நீண்ட இடைவெளிக்குப் பின் உண்ணுவது மெட்டபாலிஸ ரேட்டில் தொய்வை உண்டுபண்ணும். மேலும், உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகமாகும். இதனால் தானாகவே உடல் எடை கூடும். சிறு சிறு இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக உண்ணுவது நல்ல பலன் தரும்.

அடிக்கடி வெளியில் ரெஸ்டரென்ட்களில் சாப்பிடும்போது நம்மை அறியாமலே அதிகளவு கலோரி உட்சென்றுவிடும். இது நாளடைவில் கணிசமான அளவு எடை கூட வாய்ப்பாகி விடும்.

தொடர்ந்து உட்கார்ந்த நிலையிலிருந்து உழைப்பவர்களுக்கு பசியுணர்வு மறந்துவிடும். பின் நீண்ட இடைவெளிக்குப் பின் உண்ணும்போது உட்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிவிடும். அதன் விளைவு எடையில் பிரதிபலிக்கும். இவர்கள் நடு நடுவே பிரேக் எடுத்து சிறு சிறு உடற்பயிற்சியை செய்துவிட்டு வேலையைத் தொடர்வது ஆரோக்கியதிற்கு நன்மை தரும்.

தினமும் குறைந்தபட்சம் முப்பது நிமிடம் நீச்சல், சைக்ளிங், ரன்னிங் போன்றவற்றில் ஏதாவதொரு பயிற்சி செய்வது எடை பராமரிப்பிற்கு நன்கு உதவும்.

கலோரி அளவு அதிகமுள்ள ஆல்கஹாலை அடிக்கடி அருந்தும்போது எடை அதிகரிக்கிறது. அதனால் அதன்  அளவை குறைப்பது ஆரோக்கியம் தரும்.

வெவ்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது ஏதாவதொரு ஸ்நாக்ஸ் சாப்பிடத் தோன்றும். அவ்வாறான ஆரோக்கியமற்ற பழக்கமானது உட்கொள்ளும் கலோரி அளவைக் கூட்டி எடையையும் அதிகரிக்கச் செய்யும்.

திட்டமிடுதலின்றி, நினைத்தபோதெல்லாம் செயற்கை இனிப்பூட்டி சேர்த்த ஸ்நாக்ஸ் அல்லது ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை உண்பதும் எடை அதிகரிப்புக்கு காரணிகளாகும். ஏனெனில் இவற்றில் நார்ச்சத்து குறைவாக உள்ளதால் வளர்சிதை மாற்றம் விரைவில் நடந்துவிடும். அதனால் உட்கொள்ளும் உணவின் அளவும், உடல் எடையும் அதிகரிக்கும்.

ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவது உடல் எடை அதிகரிக்க மற்றொரு காரணமாகும். அந்த நேரத்தில் ஹார்மோன் உற்பத்தி அளவில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு பசி, சக்தியின் அளவு மற்றும் உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் முறையற்றதாக்கிவிடும்.

மேற்கூறியவற்றில் விட வேண்டியதை விட்டுவிட்டு, பின்பற்ற வேண்டியதை பின்பற்றி வாழ்வியலை மாற்றிக் கொண்டால் சரியான அளவில் எடையைப் பராமரித்து ஆரோக்கியமாய் வாழலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT