ஓமம் தண்ணீர் https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

ஜீரணப் பிரச்னைகளுக்குக் கைகண்ட மருந்தாக விளங்கும் ஓமம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கைவசம் ஓமம் இருந்தால் விருந்தை ஒரு பிடி பிடிக்கலாம். ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் காய்கள் முற்றி பழமாகி பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றது. இவை நறுமணம் மிக்கவை. சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம் பெறும் பொருள் இது. பிரெட், கேக் தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மணமூட்டியாகவும் இது பயன்படுகிறது.

ஓமத்தை பொடித்து ஒரு சிறு காட்டன் துணியில் முடிச்சு போல் கட்டி மூக்கு அருகில் வைத்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு, ஒற்றைத் தலைவலி, ஜலதோஷம் நீங்கும். ஓமத்தை நீர் விட்டு அரைத்து மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி கட்டுப்படும். ஓமத்தை பொடி செய்து சிறிது உப்பு கலந்து சூடான சாதத்தில் அரை ஸ்பூன் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கணிசமாகக் குறையும்.

பண்டிகை காலங்களில் பலவிதமான எண்ணெய் பலகாரங்களை சாப்பிடும்போது வயிறு சங்கடப்படாமல் இருக்க ஓமப்பொடியை சிறிது நீரில் கலந்து பருகலாம். அதேபோல் விருந்துகளில் பங்கேற்று அதிகப்படியாக உணவு உட்கொள்ளும் சமயம் இதனை சாப்பிட வயிறு லேசாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தயக்கம் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். இவை இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவும். ஓமத்தில் நம்முடைய உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகளைச் செய்யக் கூடியவை.

ஓமம் காரமான சுவையுடையது. அரை ஸ்பூன் ஓமத்துடன் இரண்டு கல் உப்பு சேர்த்து மென்று சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். ஓமம் நம் பாரம்பரிய மருந்துகளில் ஒன்று. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜீரணப் பிரச்னை, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

ஓமம் எளிதில் கிடைக்கக்கூடியது. ஓமத்தை பச்சையாகவோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ சாப்பிடலாம். ஓமத்தை ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் என்ற அளவில் கையால் நன்கு கசக்கி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பாதியாக வற்றியதும் வடிகட்டி பருக வயிற்றுப் பொருமல், ஜீரணப் பிரச்னை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை சரியாகும்.

உணவு சாப்பிடுவதற்கு முன் ஓமத் தண்ணீரை குடிப்பது பசியை தூண்ட உதவும். பசியின்மை பிரச்னை உள்ளவர்கள் தினமும் காலையில் இதனை கால் கப் அளவில் பருகலாம். ஓமம் சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் மூக்கடைப்பு பிரச்னை கட்டுப்படும். ஜலதோஷத்திற்கு ஏற்றது.  ஓமக் குழம்பு, ஓம ரசம் என வைத்து உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். ஓமம் ரசத்தை அப்படியே சூப் போல பருகலாம் அல்லது சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

உடல் உஷ்ணம் இருப்பவர்கள் ஓமத்தை தவிர்ப்பது நல்லது. ஆயுர்வேதத்தின்படி ஓமம் அதிக வெப்பம் கொண்ட உணவுப் பொருளாகும். எனவே, உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. மூக்கடைப்பு, சீதளத்தால் உண்டாகும் பீனிசம் போன்றவற்றை போக்கவல்லது. ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், கரோட்டின், தையாமின், இரும்புச்சத்து, ரிபோபுளேவின், நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி இதற்கும் பொருந்தும். அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்று அல்சர், நெஞ்செரிச்சல் ஏற்படலாம். குமட்டல், தலை சுற்றல் உண்டாகலாம். எனவே அளவோடு உண்டு வளமோடு வாழலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT