உலகெங்கிலும் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஆரோக்கியமான சைவ உணவு முறைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். சைவ உணவு என்பது இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்களைத் தவிர்த்து தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பதாகும். இவ்வாறு மாறுவது பல நன்மைகளை வழங்கினாலும், திடீரென சைவ உணவுக்கு மாறுவது சில சவால்களையும் ஏற்படுத்தலாம். இந்தப் பதிவில் ஒருவர் திடீரென சைவ உணவுக்கு மாறுவதில் உள்ள பொதுவான சிக்கல்களை முழுமையாகப் பார்க்கலாம்.
சைவ உணவுக்கு மாறுவதில் உள்ள பிரச்சனைகள்:
சைவ உணவை மட்டுமே உணவாக உட்கொள்ளும்போது அதில் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கலாம். இரும்பு, வைட்டமின் பி12, வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருப்பதினால் அது பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே சைவ உணவுக்கு மாறுபவர்கள் எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் படியான உணவுகளை உட்கொள்வது முக்கியம்.
திடீரென சைவ உணவுக்கு மாறுபவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலமாக சமூக அழுத்தத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற தருணங்களில் சைவ உணவின் நன்மைகள் பற்றி பிறருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் உங்களை புரிந்துகொள்ளச் செய்வது நல்லது.
பொதுவாகவே, உணவகங்கள் மற்றும் சில சமூக நிகழ்வுகளில் சைவ உணவின் விருப்பங்கள் குறைவாகவே இருக்கும். எனவே சைவ உணவு உண்பவர்கள் தங்களுக்குப் பிடித்ததை பொது இடங்களில் சாப்பிட முடியாமல் போகலாம். எனவே, முடிந்தவரை சைவ உணவு உண்பவர்கள் வெளியே செல்லும்போது வீட்டிலிருந்து சமைத்து கொண்டு செல்வது முக்கியம்.
அதேபோல, திடீரென நீங்கள் சைவ உணவுக்கு மாறுவதால் உங்களது உணவுத் திட்டமிடல் மற்றும் சமையல் முறைகளில் மாற்றங்கள் தேவைப்படும். உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்கள் உங்களுக்காக தனியாக சமைக்க வேண்டிய தேவை ஏற்படலாம். எனவே, தினசரி என்ன சாப்பிடப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கான சமையல் வழிமுறைகளையும் தீர்மானிப்பதன் மூலம், இத்தகைய சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
நீங்கள் சைவ உணவுக்கு மாறியதும், சைவ உணவுகள் பற்றி அனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள். உணவு வகைகள், சமையல் குறிப்புகள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கான உணவகங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்வதன் மூலமாக, சில சவால்களை நீங்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும்.
உரேயடியாக அசைவ உணவில் இருந்து சைவ உணவிற்கு மாறாமல், கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு முயற்சி செய்யவும். ஒவ்வொரு வாரமும் உங்களது உணவில் சைவ உணவுகளை சேர்க்க முயற்சி செய்தால், திடீரென மூன்று வேலையும் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதால் ஏற்படும் சங்கடத்திலிருந்து நீங்கள் விடுபடலாம். அதேநேரம், சைவ உணவிலிருந்து போதுமான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு தகுதியான ஊட்டச்சத்து நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
திடீரென சைவ உணவுக்கு மாறுவது தொடக்கத்தில் சவாலாக தெரிந்தாலும், காலப்போக்கில் அது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என்பதால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் தாராளமாக சைவ உணவு உண்பதை தொடர்ந்து கடைபிடிக்கலாம்.