Physical labor https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

உடலுழைப்பு இல்லாது போவதில் இத்தனை பிரச்னைகளா?

சேலம் சுபா

வீன வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில் ஆண், பெண் பலருக்கும் உடலுழைப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. இதனால் காலை எழுந்தது முதல் இரவு வரை பொருளைத் தேடி ஓடும் நாம் ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு வருகிறோம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உடற்பயிற்சி கூடங்கள் என்பதே இல்லை எனலாம். ஆனால், இப்பொழுது வீதிக்கு வீதி உடற்பயிற்சி கூடங்களும், ஜிம்களும் ஆக்கிரமித்து உள்ளன. இதற்குக் காரணம் உடல் உழைப்பு குறைந்து விட்டதுதான். உலகளவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 54 சதவிகிதமாக இருந்த உடல் உழைப்பு தொழிலாளர்களின் விகிதம் தற்போது 38 சதவிகிதமாக குறைந்துள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

உடல் உழைப்பு குறைவதால் என்ன ஆகும் தெரியுமா? உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் கெட்ட கொழுப்பாக மாறுகிறது. இது வயிறு, தொடை, இடுப்பு என்று உடலின் பல பகுதிகளில் சேமிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் கட்டற்ற உடல் எடையைத் தருகிறது. உழைப்பினால் வரும் உடல் பருமன் என்பது அழகு சார்ந்த ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற கொழுப்பு சேர்வதனால் உண்டாகும் உடல் பருமன் இதய பாதிப்பு மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும் காரணமாகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பாவின் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தோம். பள்ளியிலிருந்து வரும் பிள்ளைகள் வியர்வை வழிய வழிய விளையாடிக் களித்தனர். கிராமங்களில் விவசாயம் செழிப்பாக இருந்ததால் உடலுழைப்பு என்பது அதிகப்படியாகவே இருந்தது. ஆண்கள், பெண்கள் என அனைவரும் அருகிலிருக்கும் இடங்களுக்கு நடந்தே சென்றனர். இப்படி, நம் வாழ்வோடு ஏதாவது ஒரு வகையில் இரண்டறக் கலந்திருந்தது உடல் உழைப்பு. இப்போது இந்த நிலை கிராமங்களில் சிறு சதவிகிதம் இருந்தாலும், நகரங்களில்  முற்றிலும் இல்லை என்பதே உண்மை.

சுறுசுறுப்பாக காலையில் எழுந்து நடந்து பணிக்குச் சென்ற காலத்தில் ஊரில் ஒரு சிலருக்கு மட்டுமே இரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் வந்தது. இவற்றை ‘பணக்கார நோய்’ என்று மக்கள் நகைத்த காலமும் உண்டு. ஆனால், தற்போது உள்ள உணவு மற்றும் வாழ்வியல் மாற்றத்தினால் வசதியற்ற மக்களும் இதுபோன்ற நோய்களால் பாதித்து வருவது அதிகமாகி வருகிறது.

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை அதிகம் சுவைப்பதுமே உடல் பருமனுக்கும், நோய்கள் பெருகுவதற்கும் காரணம் என்பது ஆய்வுகள் வெளியிட்டு வரும் அதிர்ச்சி தகவல். இதை எப்படித் தவிர்ப்பது?

"உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் ஓய்வில் இருப்பவர்களுக்கு 12 லிட்டர் ஆக்சிஜன் உடலுக்குள் செல்லும். அதே நேரத்தில் உடல் உழைப்பில் இருப்பவர்கள் 40 முதல் 50 முறை மூச்சு விடுவதால் சுமார் 100 லிட்டர் காற்று உள்ளே செல்கிறது. உழைப்பின் காரணமாக வேகமாகவும் ஆழமாகவும் மூச்சு விடுவதால் நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பி இரத்தத்தில் அதிக ஆக்ஸிஜனை சேர்த்து நலன் தருகிறது. மேலும், உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பினால் நமது உடலில் உள்ள அட்ரினலின் என்னும் ஹார்மோனின் அளவு அதிகரித்து நம் இதயத் துடிப்பு அதிகமாகும். இரத்த நாளங்கள் நன்கு விரிவடையும். குறிப்பாக, இரத்த ஓட்டம் என்பது சாதாரண நிலையை விட  20 மடங்கு அதிகரிப்பதால் நோய்கள் நம்மை அணுகும் வாய்ப்பு மிகவும் குறைவு" என்கின்றனர் மருத்துவர்கள்.

இனி, அமர்ந்த நிலையில் இருக்கும் பணி என்றாலும் நடு நடுவில் எழுந்து உடல் இயங்க அனுமதிக்க வேண்டும். உடற்பயிற்சிகளும் தீவிர உடல் உழைப்பும் ஒரு மனிதனை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. உடலுக்கு உழைப்பு தந்து உடல் நலப் பிரச்னைகளிலிருந்து தப்பிப்போம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT