DLD எனப்படும் வளர்ச்சி மொழிக் கோளாறு என்பது ஒரு மனிதரால் பிறர் பேசும் வார்த்தைகள் மற்றும் சொற்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல பதில் சொல்ல முடியாமல் சிரமப்படுவதைக் குறிக்கிறது. டி.எல்.டி உடைய குழந்தைகள் மொழியைப் புரிந்து கொண்டு, பதில் சொல்லும் திறன் தொடர்பான சிக்கல்களைப் பற்றிய அறிகுறிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தாமதமான பேச்சு வளர்ச்சி: இந்தக் குழந்தைகள் பிற குழந்தைகளைப் போல சரியான வயதில் பேசத் தொடங்குவதில்லை. மேலும், எளிமையான சொற்களைப் பயன்படுத்தவும், பிறர் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் சிரமப்படுகின்றன. அதேபோல, தன் வயதுடைய குழந்தைகளைப் போல அல்லாமல் கற்றல் மற்றும் கேட்டலில் புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் மிகச் சிரமப்படுகின்றனர். வளர்ந்த பின்பு கூட இவர்களுக்கு வாக்கியங்களை உருவாக்குவதில் சிரமம், சரியான இலக்கண அமைப்புகளை பயன்படுத்த முடியாமை போன்றவை மோசமான அல்லது இலக்கணமற்ற பேச்சுக்கு வழி வகுக்கிறது.
மோசமான கேட்கும் திறன்: பேசுவதில் உள்ள சிரமத்தோடு சேர்த்து, கேட்கும் திறனும் இவர்களுக்கு மந்தமாக உள்ளது. பிறர் பேசும் மொழியைப் புரிந்து கொள்வதில் சிக்கல், தெளிவுபடுத்துவதற்காக அதை மீண்டும் சொல்ல சொல்வார்கள். பிறர் ஜோக் அடித்தால் அதைப் புரிந்துகொள்ள சிரமப்படுவது, சொற்பொழிவுகள் அல்லது உருவக மொழியைப் புரிந்து கொள்வது போன்றவை இவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும்.
குறைவான ஈடுபாடு: கதை சொல்லுதல் அல்லது வாசித்தல் போன்ற மொழி சார்ந்த செயல்பாடுகளில் குறைவான ஈடுபாடு இருக்கும். பிறர் சொல்லும் கதைகளையும் இவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. மேலும் ரைம்ஸ்களை அடையாளம் கண்டு அவற்றை திருப்பிச் சொல்வது இவர்களுக்கு முடியாததாக இருக்கும். வார்த்தைகளுக்குள் உள்ள ஒலிகளை கையாள்வதில் உள்ள சிரமம் காரணமாக தடுமாறுவார்கள். அதனால் இவர்களால் சரியாகப் பேச முடியாது. பேச்சின்போது இடையில் தயக்கம் ஏற்பட்டு, இடையில் நிறுத்தி விடுவார்கள்.
பாதிப்புகளும், போராட்டங்களும்: அடிப்படை மொழிச் சொற்களின் சிரமம் காரணமாக வாசிப்பு மற்றும் எழுதும் தொடர்புடைய சிக்கல்கள் இவர்களது கல்வியை பாதிக்கிறது. எழுத்தறிவு வளர்ச்சியில் கடுமையான போராட்டங்களுக்கு வித்திடுகிறது. சொற்களைப் புரிந்து கொள்வதில் மட்டுமல்ல, உடல் மொழி, குரலின் தொனி போன்றவற்றையும் இவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
மன ரீதியான பாதிப்புகள்: தங்களது இயலாமை காரணமாக மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள் ஏற்படுத்தும் சாத்தியமான விரக்தி போன்றவை இவர்களது நடத்தையில் கோபத்தை வெளிப்படுத்தும். பல சமயங்களில் கோபமாகவும் விரக்தியாகவும் காணப்படுவார்கள்.
சிகிச்சையும், பலன்களும்: இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளை தகுதி வாய்ந்த நிபுணரின் மூலம் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். ஆரம்பகால சிகிச்சை நல்ல கணிசமான பலன்களைத் தரும். சிகிச்சை மற்றும் தேவையான ஆதரவு, பயிற்சிகள் போன்றவற்றின் மூலம் குழந்தைகளின் மொழித்திறனை மேம்படுத்த முடியும். இதற்கு குடும்பத்தாரும், ஆசிரியர்களும் நண்பர்களும் உதவி செய்ய வேண்டும்.
சிகிச்சையின் மூலம் DLDயை சரியாகக் கையாள முடியும் என்பதற்கு வூப்பி கோல்ட்பர்க் ஒரு சிறந்த உதாரணம். பிரபல அமெரிக்க நகைச்சுவை நடிகை வூப்பி கோல்ட்பர்க் தனது பேச்சுக் குறைபாடு மற்றும் கற்றல் சிரமங்களைப் பற்றி விவாதித்துள்ளார். இது DLD உடைய நபர்களின் அனுபவங்களை ஒத்திருக்கும். தனது 12 வயதில் ஹாரி பாட்டராக நடித்த டேனியல் ராட்க்ளிஃப் என்ற நடிகர் DLDயைப் போன்ற பண்புகளையுடைய டிஸ்லெக்ஸியாவுடனான தனது போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். மொழி கையகப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட சவால்களை அவரது அனுபவங்கள் எடுத்துக்காட்டுகிறது.