Rainy season problems and relief 
ஆரோக்கியம்

மழைக்கால பிரச்னைகளும் நிவாரணமும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ழை மற்றும் குளிர் காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு குதிகால் வெடிப்பு, சேற்றுப்புண், உதடு வெடிப்பு, சருமம் வறண்டு போகுதல் ஆகியவை உண்டாவது இயல்பு. இந்தப் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு நிவாரணம் தேட முடியும்.

சேற்றுப்புண்: மழைக்காலத்தில் பெரும் தொந்தரவு கொடுக்கும் பிரச்னைகளில் சேற்றுப்புண்ணும் ஒன்று. இதனால் சில சமயம் செருப்புப் போட்டு நடப்பதற்கே சிரமம் ஏற்படும். சேறு, நீண்ட நாட்களாக தேங்கிய தண்ணீர் அல்லது கழிவு நீரிலிருந்து உருவாகும் கிருமி தொற்றுதான் கால்களில் புண்களை உண்டாக்கும். பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் வரும் சேற்றுப்புண்களை வராமல் தடுக்க வெளியில் சென்று விட்டு வந்தவுடன் முதலில் கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும். எப்போதும் ஈரப்பதமான இடங்களில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு சேற்றுப்புண் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

இனி, சேற்றுப்புண்ணுக்கு நிவாரணம் தரும் சில கை வைத்தியங்களைப் பார்க்கலாம்.

1. சாலை ஓரங்களில் சாதாரணமாகக் காணப்படும் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து சேற்றுப்புண்ணில் பூசலாம்.

2. மருதாணி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூச, சேற்றுப்புண் குணமாகும்.

3. வெந்நீரில் சிறிது கல் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அதில் வைத்திருந்து மென்மையான காட்டன் துணியால் துடைத்து வாசலின் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது சேற்றுப்புண்ணுக்கு நிவாரணம் தரும்.

4. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து நீரில் போட்டு சிறிது மஞ்சள் தூளும் கலந்து கொதிக்க விட்டு பொறுக்கும் சூட்டில் அந்த நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து எடுக்க சேற்றுப்புண் குணமாகும்.

5. வேப்பெண்ணையை சூடுபடுத்தி தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் குழைத்து தடவ, சேற்றுப்புண் பிரச்னைக்கு நல்ல குணம் தெரியும்.

குதிகால் வெடிப்பு:

1. குதிகால் சருமம் வறண்டு, கடினமாகி செதில்களாக மாறும். பிளவு அதிகமாக ஏற்படும்போது வலிக்கும். இதற்கு கற்றாழை ஜெல் கொண்டு பாத வெடிப்புகளில் தடவ, இறந்த செல்களை அகற்றி பாதங்கள் மிகவும் மிருதுவாகிவிடும்.

 2. விளக்கெண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து இரவு படுக்கப்போகும் சமயம் பாதங்களில் தடவ, பாத வெடிப்புகள் சரியாகும்.

 3. வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் சோடா கலந்து 15 நிமிடங்கள் பாதங்களை அதில் வைத்திருந்து, பின்பு ஈரம் போக துணியால் துடைத்து தேங்காய் எண்ணெய் தடவ, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

4. வீட்டிலும் மென்மையான சாக்ஸ்களை போட்டுக்கொண்டு நடக்க குதிகால் வெடிப்பு அதிகமாகாமல் இருப்பதுடன் நடப்பதில் சிரமம் இல்லாமலும் இருக்கும்.

5. தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து வெடிப்புகளில் தடவ, விரைவில் வெடிப்புகள் மறைந்து அந்தப் பகுதி மென்மையாகிவிடும்.

உதடு வெடிப்பு, சருமம் வறண்டு போகுதல் ஆகியவற்றிற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. வாசலின், நெய் ஆகியவற்றை உதடு வெடிப்பின் மீது சிறிது தடவ சரியாகும். சருமம் வறண்டு போகாமல் இருக்க வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் குளியல், அவ்வப்போது தேங்காய் எண்ணெய் தடவுதல் நல்ல பலன் தரும்.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT